என் மனைவி போகாத கோயில்களே இல்லை: ஸ்டாலின்

திமுக இந்துக்களுக்கு எதிரியில்லை எனவும், திமுகவில் பலரும் கோயிலுக்குச் செல்கிறார் என்றும் ஸ்டாலின் கூறினார்.

ஆவடி கோனாம்பேடு கிராமத்தில் சாதிமத வேறுபாடின்றி நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அவருக்கு தமிழ் கலாச்சார முறையில் மயிலாட்டம், ஒயிலாட்டம்,கரகாட்டம் தப்பாட்டம், பொய்க்கால் குதிரை மற்றும் பேண்டுவாத்தியம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.


நிகழ்வில் பொங்கல் வைத்த ஸ்டாலின், பசு பூஜை செய்து, மாலை அணிவித்து வணங்கினார். அதன்பின்னர் கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டார். ஸ்டாலினுக்கு திமுகவினர் சார்பில் வெள்ளி செங்கோள் பரிசாக வழங்கப்பட்டது.


இறுதியாக உரையாற்றிய ஸ்டாலின், தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். நமக்கு இன்னும் 4 மாதங்களில் வழி பிறக்கும். பிறந்தே தீரும் எனவும் அதற்காகத்தான் இங்கே குழுமி இருக்கிறோம். உழவர்களுக்கான திருநாளில் உழவர் சந்தோஷமாக இருக்க வேண்டும். இன்னும் நான்கு மாதங்கள் பொறுங்கள். திமுக. ஆட்சிக்கு வந்தால் எனது முதல் கையெழுத்தே விவசாய கடனை தள்ளூபடி செய்வதுதே ஆகும் என்றார்.


திமுகவை ஏதோ கோவிலுக்கு எதிரி போல் சித்தரிக்கிறார்கள் எனவும், கோயில்கள் கூடாது என்பதல்ல. கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது என்று தலைவர் கலைஞர் அவர்கள் பராசக்தியில் சிவாஜி அவர்களது முதலாவது வசனத்திலேயே சொன்னார் என்றும் நினைவூட்டிய ஸ்டாலின், அதைப் புரிந்துகொள்ளாமல் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு தி.மு.க. ஏதோ இந்துக்களுக்கு எதிரி போல சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.


அது உண்மை அல்ல. வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், என்னுடைய துணைவியார் போகாத கோயிலே கிடையாது. திமுகவிலுள்ள பல மாவட்ட செயலாளர்கள் நெற்றியில் குங்குமம் வைத்திருப்பார்கள். திமுகவில் பலரும் கோயிலுக்குச் செல்கிறார்கள். பக்தி என்பது தனிப்பட்ட விருப்பம் எனக் கூறினார்.

Exit mobile version