எம்.எல்.ஏ. மகனுக்கு டெண்டர் அளித்த அமைச்சர் சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ய வேண்டும் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகனுக்கு கல்குவாரி டெண்டருக்கு ஒப்புதல் அளித்த அமைச்சர் சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகனுக்கு கல்குவாரி டெண்டருக்கு ஒப்புதல் அளித்த அமைச்சர் சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எம்,எல்,ஏ. மகனுக்கு குத்தகை
வானூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்,ஏ. சக்ரபாணியின் மகனுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் குவாரி குத்தகை அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சக்ரபாணி மகனுக்கு குவாரி குத்தகை அளித்திருப்பது அம்பலமாகியுள்ளது.
பொது ஊழியர்கள் தங்களுக்கோ அல்லது தங்களுடைய உறவினர்களுக்கோ அரசுப் பணிகளை டெண்டர் எடுக்கக் கூடாது. அரசின் காண்ட்ராக்டுகள் மற்றும் குத்தகைகளைப் பெறக் கூடாது என்பது எல்லோரும் அறிந்திருக்கும் விதி.

தகுதிநீக்கம்
ஆனால், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகனுக்கே கல்குவாரி கொடுத்திருப்பதால் அமைச்சர் சி.வி.சண்முகம் ஊழல் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டியவராகிறார். ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் சக்கரபாணி, தனது மகனுக்கே அரசு கல்குவாரியைக் குத்தகைக்குப் பெற்றிருப்பதால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பதவியிலிருந்து தகுதி நீக்கத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டியவராகிறார்.
எந்த விதிமுறைகளுக்கும் கட்டுப்படாத ஒரு காட்டாட்சியை முதல்வர் பழனிசாமி நடத்திக் கொண்டிருக்கிறார். உறவினர்களுக்கு டெண்டர் கொடுப்பது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றம் என்பது தெரிந்தும் கூட – தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு முதல்வரும் அதிமுக அமைச்சர்களும் அரசு கஜானாவைக் கொள்ளையடித்து வருவது ஆபத்தானதும், அவமானகரமானதும் ஆகும்.

ராஜினாமா
எனவே, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சக்ரபாணியின் மகனுக்கு அளிக்கப்பட்ட கல்குவாரி லைசென்ஸை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அந்த லைசென்ஸ் வழங்கிய துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்தக் குற்றச்சாட்டின் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version