நான் எம்.ஜி.ஆர் மடியில் வளர்ந்தவன்: அதிமுகவினருக்கு பதிலடி கொடுத்த கமல்

நான் எம்.ஜி.ஆரின் மடியில் வளர்ந்தவன் என அதிமுகவினருக்கு கமல்ஹாசன் காட்டமாக பதிலளித்துள்ளார்.

புதிதாக கட்சி ஆரம்பிக்கும் நடிகர்கள் பலரும் எம்.ஜி.ஆர் ஆட்சி அமைப்போம் என்றே கூறி வருகிறார். நடிகர் பாக்யராஜ் எம்.ஜி.ஆர் பெயரில் கட்சியே ஆரம்பித்து அதன்பிறகு அதனை கலைத்துவிட்டார். நடிகர் விஜயகாந்தை தேமுதிக தொண்டர்கள் கறுப்பு எம்.ஜி.ஆர் என்றுதான் ஆரம்ப காலத்தில் அழைத்தனர். அதேபோல கட்சி ஆரம்பிக்காத ரஜினிகாந்தே, எம்.ஜி.ஆர் ஆட்சியை மலரச் செய்வேன் எனக் கூறியுள்ளார்.


இதனிடையே அதிமுக அமைச்சர்கள் விடுத்த சவாலுக்குப் பிறகுதான் கட்சி தொடங்கினார் கமல்ஹாசன். இந்த நிலையில் தற்போது தன்னை எம்.ஜி.ஆரின் நீட்சி என்று சொல்லி அவரது பெயரை வைத்து பிரச்சாரத்தை நகர்த்துகிறார். மதுரையில் தனது முதல் நாள் பிரச்சாரத்தில் பேசிய கமல்ஹாசன், மதுரையை இரண்டாம் தலைநகராக மாற்றிக்காட்ட வேண்டும் என்று எம்.ஜி.ஆர் கனவு கண்டதாக குறிப்பிட்டார்.

read more: அரசு மாணவர்களை எதிரியா பாக்காதீங்க: 7.5 சதவிகித வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

எம்.ஜி.ஆர் கனவின் நீட்சிதான் தான் எனக் குறிப்பிட்ட அவர், எம்.ஜி.ஆர் கனவை நனவாக்காமல் உறங்கிக் கொண்டுள்ள ஊழல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் இது என்றும் அதிமுகவை விமர்சித்தார். இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் நீட்சி தான் என கமல்ஹாசன் சொன்னதற்கு அதிமுகவில் கடும் விமர்சனங்கள் கிளம்பின.


இதற்கு ட்விட்டரில் பதில் சொன்ன கமல்ஹாசன், புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம். எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும். எதுவும் தடையல்ல என காட்டமாக பதிவிட்டுள்ளார். அத்துடன், தனக்கு எம்.ஜி.ஆர் முத்தமிடும் வீடியோவையும் கட் செய்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Exit mobile version