சீனாவில் ஒரே காரில் பயணித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடின்!
சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் இரண்டாவது நாளாக பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் புடினுடன் ஒரே காரில் பயணித்த புகைப்படத்தை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் சூழலில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்களை வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா இந்திய இறக்குமதி பொருளுக்கு 50 சதவீத இறக்குமதி வரி விதித்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு அதிகரிக்கப்பட்ட போதிலும் ரஷ்யா உடனான நல்லுறவு தொடரும் என இந்தியா மிக உறுதியாக உள்ள நிலையில் சீனாவில் இந்தியா மற்றும் ரஷ்ய தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபருடன் இருதரப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இருவரும் ஒரே காரில் சென்றுள்ளனர். தியான்ஜினில் நடைபெறும் இந்திய ரஷ்யா நாடுகள் இடையிலான இருதரப்பு ஆலோசனைக் கூட்டத்தில் இரு நாடுகளுடைய நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் நடைபெறுவதோடு, உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாகவும் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபருடன் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.