கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அதில்
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி -23.9 சதவீதம் குறைந்துள்ளது. இது அதிர்ச்சி அளிக்கும் தகவல் என்றாலும், அதற்கான முழு பொறுப்பை கொரோனா மீது போட்டுவிட்டு தப்பித்துக்கொள்ள முயற்சி செய்யும் பிரதமர் மோடியின் செயல் அதை விட அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது. பிரதமராக மோடி வந்த பிறகு நாட்டின் பொருளாதாரத்திற்கு நோய் பிடித்துவிட்டது. நாட்டின் பொருளாதாரம் தவறான பாதையில் செல்வதாக பல்வேறு பொருளாதார நிபுணர்கள் மத்திய அரசை எச்சரித்தனர்.
அப்போது இதை மத்திய அரசு பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை மிகவும் அலட்சியப்படுத்தியது. கொரோனாவுக்கு முன்பு நாட்டின் வளர்ச்சியை கணக்கிடும் புள்ளி விவரங்களை மாற்றினர். இதனால் அதிகாரப்பூர்வமாக வளர்ச்சி குறித்த சரியான புள்ளி விவரங்கள் வெளியிடவில்லை. கொரோனாவை தடுப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய மத்திய அரசு, கை தட்டுங்கள், மணி அடியுங்கள் என்று கூறியது. இது மத்திய அரசின் அலட்சிய போக்கை எடுத்துக் காட்டுகிறது.
கொரோனாவை தடுக்க மத்திய அரசு அமல்படுத்திய ஊரடங்கை காங்கிரஸ் ஆதரித்தது, ஆனால் மத்திய அரசு தினசரி ஏதாவது ஒரு முடிவை எதிர்பாராமல் எடுத்து வந்ததால் நன்மையை விட பாதிப்புகளே அதிகரித்தது.
கொரோனா பாதிப்புக்கான முழு பொறுப்பை பிரதமரே ஏற்க வேண்டும். நாட்டின் இன்றைய மோசமான நிலைக்கு பணமதிப்பிழப்பு, குறைகளுடன் செயல்படுத்திய GST வரி , பணியாற்றவே தெரியாத மந்திரிகள் போன்றவை தான் முக்கிய காரணம். நோய்க்கு காரணம் தெரியாமல் மருந்து கொடுத்தால் அந்த நோய் தீராது.இவ்வாறு அவர் கூறினார்.