இது பேங்கா இல்ல உன் வீட்டு… அத்துமீறிய மேனேஜரை வெளுத்து வாங்கிய எம்.பி.!

நவராத்திரியையொட்டி 9 தினங்களுக்கு 9 நிறங்களில் ஆடையணிந்து வராவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ள ‘யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுக்கு’ மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், யூனியன் பாங்க் ஆப் இந்தியா மைய அலுவலகத்தில் உள்ள பொது மேலாளர் (நவீன மயம்) ஏ.ஆர்.ராகவேந்திரா என்பவர் இப்படி ஒரு சுற்றறிக்கையை 01.10.2021 அன்று வெளியிட்டுள்ளார். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் உடை கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டுமாம். விடுமுறை நாளாக இருந்தாலும்… யார் இவருக்கு அதிகாரம் தந்தது! ஊழியர் விதி முறைகளில் எந்த சரத்தின் கீழ் இந்த சுற்றறிக்கையை அவர் விடுத்துள்ளார்?.

நவராத்திரியை நம்பிக்கை உள்ளவர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள். அது அவர்களின் விருப்பம். தனிப்பட்ட உரிமை. ஆனால் எல்லோரும் கொண்டாடியாக வேண்டும், இன்ன நிறத்தில் உடை உடுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது அதிகார மீறல். அடுத்தவரின் உரிமைகளில் தலையிடுகிற அத்து மீறல். நிதி அமைச்சகம், யூனியன் வங்கி சேர்மன் உடனடியாக தலையிட வேண்டும்! சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட வேண்டும்! சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version