மாநிலத்தை நிதீஷ் குமார் ஆளலாம்,ஆனால் நாங்கள் மக்கள் மனதை ஆள்கிறோம் – தேஜஸ்வி யாதவ் உற்சாக பேட்டி

பிகார் மாநிலத்தை வேண்டுமானால் முதல்வர் நிதீஷ் குமார் ஆளலாம். ஆனால் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்றதன் மூலம் நாங்கள் மனதை ஆள்கிறோம் என்று முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகனும், ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறினார்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணி 110 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி 75 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு முதல் முறையாக ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, “எங்கள் கட்சிக்கு வாக்களித்த பிகார் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் தீர்ப்பு மெகா கூட்டணிக்கு சாதகமாக இருந்தது, ஆனால் தேர்தல் ஆணையத்தின் முடிவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக உள்ளது.

இதுபோன்று நடப்பது இது முதல் முறையல்ல. 2015 ஆம் ஆண்டில் மெகா கூட்டணி உருவானபோது, வாக்குகள் எங்களுக்கு ஆதரவாக இருந்தன, ஆனால் பாஜக பின்வாசல் வழியாக நுழைந்து அதிகாரத்தைப் பெற்றது. நிதிஷ் குமார் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து ஆட்சி செய்யலாம், ஆனால் நாங்கள் மக்களின் இதயங்களை ஆள்கிறோம்” என்றார்.

Exit mobile version