கொரோனா வார்டுகளில் பணிநியமனம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கொரோனா வார்டுகளில் பணிநியமனம் தொடர்பாக இனி எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ViviCam 6300

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வைரம் சந்தோஷ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
கொரோனா வார்டு
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கக் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை ஜூலை 3-ல் அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணை அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை தேர்வு செய்வதற்கான பொறுப்பு தனியார் மனிதவள நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்கள்
நாளிதழ்களில் வெளிப்படையாக அறிவிப்பு வெளியிட்டு தகுதியான மருத்துவர்கள், செவிலியர்களிடமிருந்து விண்ணப்பம் பெற்று நியமனம் நடைபெற வேண்டும். இந்த விதிமுறையை பின்பற்றாமல் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள், செவிலியர்களை தனியார் நிறுவனம் மூலம் தேர்வு செய்வது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.
எனவே, அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் தொடர்பான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், 118 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் நடைபெறுகிறது என்றார்.

பணிநியமனம் கூடாது
இதையடுத்து நீதிபதிகள், அரசு மருத்துவ மனைகளில் கொரோனா வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் நியமனம் செய்வதில் தற்போதைய நிலை தொடர வேண்டும். இனிமேல் பணி நியமனம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றனர். மனு தொடர்பாக சுகாதாரத் துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Exit mobile version