அமைச்சர்களும், பாஜகவினரும் சொல்வதை கேட்க வேண்டாம் என்று வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியில் தற்போது முதல்வர் வேட்பாளர், கூட்டணி ஆட்சி தொடர்பான சர்ச்சைதான் போய்கொண்டிருக்கிறது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டாலும், அவர் கூட்டணியின் வேட்பாளர் அல்ல என பாஜகவின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை அறிவிக்கும் எனவும் தெரிவித்தனர். அதேபோல தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என சொல்கிறார்கள். இதற்கு பதிலளித்த அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் தான் கூட்டணி எனவும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் திண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தமிழக முதல்வர் யார் என்பது குறித்து அமைச்சர்களோ, பாஜகவினரோ சொல்வதைக் கேட்கவேண்டாம். அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர் என அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார். இதில் எந்த மாற்றமும் கிடையாது என்றார்.
read more: அரசியலுக்கு வாங்க: ரஜினி வீட்டுக்கு முன்பு அமர்ந்த ரசிகர்கள்!
தேமுதிக கட்சி அதிமுக கூட்டணியில் தான் உள்ளது. பாஜகவும் அதிமுக கூட்டணியில்தான் இருப்பதாக தெரிவித்த அவர், “கட்சி தொடங்கவில்லை என்ற ரஜினிகாந்தின் அறிவிப்பை நான் வரவேற்கிறேன். ஒவ்வொருவருக்கும் அவர்களின் உடல்நிலை மிகவும் முக்கியம்” என்றார்.