கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக தாமதப்படுத்துவதில் யாருக்கும் பயனில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருக்கிறார்.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மற்றும் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இருவருக்கும் இன்று திருமண நாள். இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அவர்களை வாழ்த்தி ஆசீர்வாதம் பெற்றனர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா ஆண்டுதோறும் தேமுதிக தலைவர் ஜனவரி மாதம் 1ஆம் தேதி தொண்டர்களை சந்திப்பார். ஆனால் இப்போது கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் சந்திக்க முடியவில்லை எனவே எங்கள் திருமண நாளான இன்று அனைவரையும் சந்தித்து இருக்கிறோம் என்றார். அதிமுக கூட்டணியில் தான் தற்போது வரை இருக்கிறோம்.
கூட்டணி பேச்சுவார்த்தை கால தாமதம் செய்யாமல் கூட்டணி பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும். கூட்டணி பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துவதால் யாருக்கும் பலனில்லை. நாடாளுமன்ற தேர்தலில் விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்ததால் எங்களுக்கு தேவையான தொகுதிகளை பெறமுடியாமல் இருந்தது ஆனால் தற்போது சட்டமன்ற தேர்தலுக்கு ஏற்கனவே பணிகளை துவங்கி உள்ளோம் எனவே வரும் தேர்தலில் பெரிய வெற்றியை பெறுவோம்.தேமுதிக தலைவர் விரும்பினால் தேமுதிக தொண்டர்கள் விருப்பம் தெரிவித்தால் இந்த முறை சட்டமன்றத்தில் என்னுடைய குரல் நிச்சயம் ஒலிக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.