“சசிகலாவிற்கு ஜால்ரா அடிப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது” – அமைச்சர் ஜெய்குமார்

அதிமுகவில் இருந்து கொண்டு சசிகலாவிற்கு ஜால்ரா அடிப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் ஜெய்குமார் கூறியுள்ளார்.

சென்னை ராயபுரத்தில் உள்ள தமது தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் பொங்கல் விழாவில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறினார். அப்போது, சசிகலா குறித்து கோகுல இந்திரா தெரிவித்த கருத்து, சசிகலாவின் அரசியல் வருகை தொடர்பானது அல்ல என ஜெய்குமார் குறிப்பிட்டார். சசிகலா விடுதலையால் எந்த தாக்கமும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கத்திற்கு பொதுமக்கள் விருப்பத்தின் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய ஜெய்குமார் இதற்காக பொதுமக்களும் மீனவர்களும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றார். அதிமுக அமமுக தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து நின்றவர்கள் குறித்து ராஜேந்திர பாலாஜி தெளிவு இல்லாமல் இருப்பதாகவும் அவர் கூறினார். சட்டமன்ற தேர்தல் கூட்டணியை இறுதி செய்தவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக முடிவு செய்யப்படும் என்றும் கூட்டணியை இறுதி செய்வது பற்றி, ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ்.சும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் அறிவிப்பார்கள் என ஜெய்குமார் கூறினார்.

Exit mobile version