இன்றைய காலத்தில் குறிப்பாக கொரோனா பொது முடக்க காலத்தில் வீட்டில் இருந்தபடியே நமக்குப் பிடித்த ஹோட்டல் உணவை ஆர்டர் செய்து சாப்பிடுகிறோம். சோமேட்டோ , ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த ஆன்லைன் உணவு டெலிவரி சேவையை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் சோமேட்டோ நிறுவனம் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஸ் என்பவர் சோமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். அதில் ஒரு ஆர்டர் மிஸ் ஆகியுள்ளது. இதுகுறித்து அவர் கஸ்டமர்கேரில் மெசேஜ் மூலம் கேட்டதற்கு , பணம் திரும்ப கிடைக்காது என்று கூறியதுடன், இந்தியில் பேசுமாறு அவரை அறிவுறுத்தியுள்ளனர். இந்தி தனக்கு தெரியாது என்று விகாஸ் கூறியதால் , தேசிய மொழியான இந்தியை தெரிந்து கொள்ளாமல் எப்படி இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு விகாஸ், நீங்கள் தமிழ்நாட்டில் சேவை வழங்கினால் தமிழ் தெரிந்த ஆட்களை பணிக்கு அமர்த்த வேண்டும். தமிழில் பேசும் அதிகாரியிடம் கனெக்ட் செய்யும்படி கூறியுள்ளார், அதற்கும் அந்த ஊழியர் மறுத்துவிட்டார்.
இதை வாடிக்கையாளர் விகாஸ் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், சோமேட்டோ நிறுவனத்திற்கு எதிராக #Reject_Zomato, #ZomatoSpeakTamil உள்ளிட்ட ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்விட்டரில் டிரெண்டானது.
இதுகுறித்து திமுக எம்.பி., கனிமொழி தனது ட்விட்டரில்,” குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே சில நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை செயல்பட்டு வருகிறது. நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாநில மொழியில் பேசுவதைக் கட்டாயமாக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை” என்று கடுமையாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சோமேட்டோ நிறுவனத்துக்கு எதிராக கண்டனங்கள் வலுத்த நிலையில், அந்த நிறுவனத்தின் பங்கு சந்தை பங்குகள் சரிவை சந்தித்து வருகிறது.