அ.தி.மு.க கொடி விவகாரத்தில் சசிகலாவுக்கு நோட்டீஸ்

அ.தி.மு.க கொடி பொருத்திய காரை பயன்படுத்தியதால் சசிகலாவுக்கு தமிழக காவல்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

சிறை தண்டனை முடிந்து தமிழகம் வரும் சசிகலா காரில் அ.தி.மு.க கொடி இருக்கக்கூடாது என தமிழக காவல்துறை ஏற்கனவே எச்சரித்து இருந்தது. ஆனால் அதையும் மீறி அ.தி.மு.க கொடியுடன் சசிகலா பயணம் செய்தார். தமிழக எல்லைக்குள் நுழைந்தபோது ஓசூர் அருகே அவரது வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் தடையை மீறி அ.தி.மு.க கொடியை பயன்படுத்தியதற்காக சசிகலாவுக்கு கிருஷ்ணகிரி ஏடிஎஸ்பி சக்திவேல் நோட்டீஸ் வழங்கினார். அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் அந்த நோட்டீஸை தமிழக காவல்துறையிடம் இருந்து பெற்றுக் கொண்டார். அ.தி.மு.க கொடியை நீங்களாகவே அகற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். கொடியை அகற்றுவதற்கு சசிகலாவுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இல்லை என்றால் காவல்துறையே அந்தக் கொடியை அகற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version