கூட்டணியெல்லாம் இல்லை, தனித்தே போட்டி: சீமான் அதிரடி!

வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடவுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் இயக்கத்தை 2010ஆம் ஆண்டு கட்சியாக மாற்றிய சீமான், 2016 சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக கடலூர் தொகுதியில் போட்டியிட்டார். அத்துடன், 234 தொகுதிகளுக்கும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தினார். அந்தத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் நாம் தமிழர் கட்சி தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் 20 ஆண், 20 பெண் வேட்பாளர்களை நிறுத்தினார்.எப்போதும் தனித்துதான் போட்டியிடுவோம் என சீமான் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.


2021 சட்டமன்றத் தேர்தல் பணிகளைத் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி சில மாதங்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒருவரை அழைத்து தேர்தல் பணிகளை கவனிக்க உத்தரவிட்டுள்ளார் சீமான். அவர்கள்தான் வேட்பாளர்களாகவும் அறிவிக்கப்படவுள்ளது.

read more: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ரஜினிக்கு விரைவில் சம்மன்!


இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமான் நாம் தமிழர் கட்சி, ஆசாதுதின் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சி கூட்டணியமைத்து தேர்தலை சந்திக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அப்படி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என மறுத்துள்ளார் சீமான்.


தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், யார் யாருடன் வேண்டுமானாலும் கை கோர்க்கலாம். நான் மக்களுடன் கை கோர்க்கிறேன். நாங்க தனித்தே போட்டியிடுவோம். ஒவைசி மீது எனக்கு மதிப்பு உண்டு. அவ்வளவுதான். நாம் தமிழர் கட்சி ஒவைசி கட்சியுடன் மட்டுமல்ல எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம். 234 தொகுதிகளுக்கும் நாங்கள் வேட்பாளரையே இறுதி செய்து விட்டோம் என்று கூறியுள்ளார்.

Exit mobile version