தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு தனது ஆதரவுவாளர்களுடன் ஓ. பி. எஸ் விடிய விடிய ரகசிய ஆலோசனை!!!

ஆளும் அ. தி. மு. க அரசின் பதவிக்காலம் வரும் மே மாதத்தோடு நிறைவடைகிறது இதனால் தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற பொதுதேர்தல் நடைபெற உள்ளது.

அதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் தற்போதைய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்- அமைச்சரும், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்தநிலையில் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என்றும், அந்த குழு தான் வேட்பாளர் தேர்வு முதற்கொண்டு அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வலியுறுத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதற்கிடையே வருகிற 7-ந்தேதி முதல்-அமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. செயற்குழுவில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு வந்தார். பின்னர் அவரது வீட்டில் ஜக்கையன் எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலருடன் ஓ. பி. எஸ் ஆலோசனை நடத்தினார்.

இதனைத்தொடர்ந்து நேற்று காலை பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டி பண்ணை வீட்டிற்கு சென்றார். அங்கு தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அ.தி.மு.க. நிர்வாகிகள் வந்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன அவர்களுடன், ஓ. பி. எஸ் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். இதனையறிந்த செய்தியாளர்கள் நேற்று காலை முதலே பண்ணை வீட்டின் முன்பு கூடி இருந்தனர். ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

ஓ. பி. எஸ் தனது ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்ட சம்பவம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version