அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருப்பதே பெருமை என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை :
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி :
சட்டமன்ற தேர்தலில் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கும், பொதுக்குழுவுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார். மேலும் ஆளுநரிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்றும் ஊழல் குற்றச்சாட்டு குறித்து ஸ்டாலினுடன் நேரடியாக விவாதிக்க தயார் என்றும் அவர் தெரிவித்தார்.
Read more – வருகிற 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் : மத்திய அரசு அறிவிப்பு
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேசுகையில் :
“அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருப்பதே பெருமை. சட்டமன்ற தேர்தலுக்காக ஓடி, ஓடி உழைக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது” என்று கூறினார். மக்களின் ஆதரவை அதிமுகவை நோக்கி திருப்ப வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் சட்டசபையில் அதிமுகவிற்கு எதிர்கட்சிகளே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த பல திட்டங்கள் மூலம் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் அவர் கூறினார்.