எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வாரிசு இவர்கள்தான்: முதல்வர் விளக்கம்!

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வாரிசுகள் யார் என்பது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு யார் என்பது தொடர்பான விவாதங்கள் தற்போது ஆரம்பித்திருக்கிறது. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தேர்தல் பிரச்சாரத்தின்போது தான்தான் எம்.ஜி.ஆரின் வாரிசு என்று தெரிவித்தார். இதற்கு அதிமுகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.


ரஜினிகாந்த் ஏற்கனவே தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியை அமைப்பேன் எனக் கூறியுள்ளார். எம்.ஜி.ஆரைப் பற்றி பேசும் ரஜினியும் கமலும் அதிமுகவில் இணைந்துகொள்ளலாம் என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா விமர்சனம் செய்திருந்தது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஏ. வாணியம்பாடியில் அம்மா மினி கிளினிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைத்து உரையாற்றினார்.

read more: சுங்கச்சாவடிகள் இல்லாத இந்தியா உருவாகும்: நிதின் கட்கரி நம்பிக்கை!


அப்போது பேசிய அவர், “ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகிய இருபெரும் தலைவர்களுக்கும் வாரிசுகள் கிடையாது. நாம் தான் வாரிசு, மக்கள் தான் வாரிசு. அவ்வாறு எண்ணித்தான் நல்ல பல திட்டங்களை இந்த நாட்டு மக்களுக்குத் தந்தார்கள். வேறு எந்தத் தலைவர்கள் வந்தாலும் அந்தத் திட்டங்களை நிறுத்த முடியாது என்று கூறினார்.


எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு குற்றம்சாட்டிக் கொண்டிருக்கின்றார். அவர் வீடியோ கான்ஃபரன்ஸில் கட்சியினரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். நாங்கள் நேரடியாக மக்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம் எனவும் சாடினார்.
மேலும், முதல்வர், “நாங்கள் மக்களுக்காக கடுமையாக உழைக்கின்றோம். நேரடியாக மக்களை சந்திக்கின்றபோதுதான் அங்கே என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதை உணர முடியும். அப்படி உணர்ந்தால்தான் அதை நிறைவேற்ற முடியும். அதை எங்களுடைய அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டு உரையாற்றி முடித்தார்.

Exit mobile version