ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா மீது போலீஸில் புகார்

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவுக்கு எதிராக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா. இவர் அதிமுகவில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக இருந்துள்ளார். தற்போது, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார்.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கிரியேட்டிவ் பர்னீச்சர் என்ற பெயரில் மரப்பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருப்பவர் பழனி. இவரது கடையில் பெரியகுளத்தில் ரோஸி வித்யாலயா என்ற பெயரில் கல்வி நிறுவனம் நடத்தி ஓ.ராஜா, அவரது மகன் அமர் ஆகியோர் மரச்சாமான்களை கொள்முதல் செய்துள்ளனர்.


மரப் பொருட்களுக்கான நிலுவைத் தொகை ரூ.1 கோடி வரை பழனிக்கு ஓ.ராஜா தரப்பு நிலுவையில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை கேட்டதற்கு தன்னை ஓ.ராஜாவும், அவரது மகனும் திருச்சி கடத்திச் சென்றுவிட்டதாக பழனி குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன், வெற்றுப் பத்திரத்தில் மிரட்டி கையெழுத்து வாங்கியதாகவும் அவர் காரைக்குடி துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் உண்மைத் தன்மை தொடர்பாகவும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்.

read more: ஆளுநரின் உத்தரவை சந்தேகிக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ்


ஏற்கனவே ஓ.ராஜா மீது பூசாரி நாகமுத்துவை தற்கொலைக்கு தூண்டியது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. மதுரை ஒன்றிய ஆவின் தலைவராக கடந்த 2019ஆம் ஆண்டு ஓ.ராஜா பொறுப்பேற்ற நிலையில், அன்றைய தினம் மாலையே அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். சில நாட்கள் கழித்து மன்னிப்பு கேட்டதன் பேரில் மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொள்ளப்பட்டார். இந்த நிலையில்தான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஓ.ராஜா.

Exit mobile version