நான் திமுக அமைச்சர்களை போல ஊழல் செய்து வாழ்கிறேனா? 500 கோடி நஷ்டஈடு கேட்ட பிஜிஆர் நிறுவனத்திற்கு அண்ணாமலை பதில்!!

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி பி.ஜி.ஆர். எனர்ஜி நிறுவனம் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அண்மையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, தமிழகத்தில் ஒரு திவாலான எனர்ஜி கம்பெனி ரூ.5,000 கோடி மதிப்பிலான ஆர்டரை தமிழக மின்சார வாரியத்துடன் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால், ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர், அந்த திவாலான கம்பெனியை விலைக்கு வாங்கி, அதனை தமிழக மின்சார வாரியத்திடம் இருந்து இந்த ஒப்பந்தத்தை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.மேலும், அந்தக் கம்பெனியின் பெயரை தற்போது வெளியிட விரும்பவில்லை எனக் கூறிய அவர், இதே நிலை நீடித்தால் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் ஆவணங்களை ஒவ்வொன்றாக வெளியிடுவோம். தமிழக மின்சாரத் துறை அமைச்சர் மற்றும் மின்சாரத் துறை அதிகாரிகளுக்கு இதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த சூழலில், அண்ணாமலையின் இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 24 மணிநேரம் கால அவகாசம் தருகிறேன். மின்சாரத்துறையில் ஊழல் நடக்கவிருப்பதாகக் கூறிய அண்ணாமலை, அந்த ஆதாரங்களை வெளியிட வேண்டும். இல்லையெனில் மன்னிப்பு கேட்க வேண்டும்,” எனப் பதிலளித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அண்ணாமலையும் முதல் ஆதாரத்தை வெளியிட்டார். அதில், தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் கடந்த சில மாதங்களாக எந்தவித கட்டணத்தையும் செலுத்தவில்லை என்றும், இந்த சூழலில் திடீரென 4% கமிஷன் பிடித்தம் போக ரூ.29.64 கோடியை விடுவித்துள்ளது, இதற்கு பதில் கூறுங்கள் எனக் கூறியிருந்தார்.

மேலும், இப்போது நாங்கள் எதைப் பற்றி பேசுகிறோம் என்பது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நன்கு புரிந்திருக்கும் என்று நம்புவதாகக் கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆலோசகர்கள் சென்னையில் வீட்டில் அமர்ந்து கொண்டே 4% கமிஷனை வசூலித்து வருவதாகவும், இந்த வாரம் அனல்மின் நிலையம், அடுத்த வாரம் சோலார் பவர், அடுத்து அடுத்த வாரம் இன்னும் பெரிய நிறுவனம் தயாராகி வருவதாக விமர்சனம் செய்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி விடுத்த பதிவில் கூறியிருப்பதாவது ;- மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளதென திரு.அண்ணாமலை கூறியதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது தெரியாமல், திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட அந்த Excel கையில் இருந்தும், அந்த தொகையையும் 29.99 கோடியென சரியாக எழுத கூட தெரியாமல், All purpose அதிமேதாவியாக எண்ணி, 4% கமிஷனென மீண்டும் பொய் புகார் கூறி கழக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பார்க்கும் அண்ணாமலை இதற்கான ஆதாரத்தையும் இன்றே வெளியிடவேண்டும். இல்லை, அவர்களது வழக்கப்படி மன்னிப்பு கேட்க வேண்டும். 2021 மார்ச் மாதம் முதல் 06.05.2021 வரை, மின் கொள்முதல், தளவாட கொள்முதல் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு சேர வேண்டிய ரூ. 15541 கோடி நிலுவையில் இருந்தது. அக். 1ல் PFC & REC நிறுவனங்களிடமிருந்து நிதி வந்த பின், தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலகத்தில் நிலுவை தொகைகள் சரி பார்க்கப்பட்டு, அந்தந்த மின் பகிர்மான மற்றும் மின் உற்பத்தி வட்டத்திற்குரிய மேற்பார்வை மற்றும் தலைமை பொறியாளர்கள் அலுவலக வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே வழக்கமான நடைமுறை, எனக் கூறினார்.

இந்நிலையில், பி.ஜி.ஆர்., நிறுவனம் குறித்து அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் கருத்துத் தெரிவித்ததாகக் கூறி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம், 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அந்நிறுவனம் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:-சார், 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றீர்கள். நான் ஒரு சாதாரண விவசாயி. என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான்! தி.மு.க., அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை. நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது அங்கு சந்திப்போம் என பதிலடி கொடுத்துள்ளார்.

Exit mobile version