தருமபுரி எம்.பி செந்தில்குமாரை அடிக்கப் பாய்ந்த பாமகவினர்!

தருமபுரி எம்.பி செந்தில்குமாரை நத்தமேடு கிராமத்தில் பாமகவினர் தாக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாமகவின் கோட்டை எனக் கருதப்படும் தருமபுரியில் 2019 மக்களவைத் தேர்தலின்போது பாமகவின் அன்புமணி ராமதாஸை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்றவர் திமுகவின் செந்தில்குமார். தொடர்ந்து ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது வன்னியர்களுக்கு அவர்கள் எதுவுமே செய்யவில்லை என்ற விமர்சனத்தை முன்வைத்து வந்தார். இதற்கு பாமக தரப்பிலிருந்து கடும் எதிர்வினையாற்றப்பட்டு வந்தது.


இந்த நிலையில் பாமகவினர் அதிகமுள்ள நத்தமேடு கிராமத்தில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் பிரச்சாரம் செய்ய சென்றார் எம்.பி செந்தில்குமார். ஆனால், அவரது வருகைக்கு பாமகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த சுப்பிரமணியனுக்கு அங்கு அமைக்கப்பட்ட நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்த சென்றபோது, அது தனியார் இடம் என சொல்லி அனுமதி மறுத்தனர்.

read more: உயர் நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி இவர்தான்!


இதனால் சுப்பிரமணியன் மனைவியை சந்திக்கச் சென்ற அவரை தடுத்தி நிறுத்தி பாமகவினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அங்கிருந்த பாமக இளைஞர்கள், எம்.பியை சூழ்ந்துகொண்டு தாக்குதல் நடத்த முயன்றனர். ஆபாசமான வார்த்தைகளால் அவரை திட்டினர். இதனால் அங்கு கடும் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறையினர் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று அருகிலுள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தங்க வைத்தனர். ஆனாலும், வாசலிலேயே பாமகவினர் நின்று கொண்டு கூச்சலிட்டதால், கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


அங்கு செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்குமார், “சுப்பிரமணியன் மனைவிக்கு 1 லட்சம் நிதி உதவி தர இருந்தேன். ஆனால், அவரை பாமகவினர் குடும்பத்தோடு எங்கேயோ அடைத்து வைத்துவிட்டனர். இருந்தாலும் அவருக்கான நிதி என்னிடம் இருக்கும். அதை எப்போது வேண்டுமானாலும் அவர் பெற்றுக்கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.

Exit mobile version