ஆர்.எஸ்.எஸ் போல பணியாற்றுங்கள்: பாமகவினருக்கு ராமதாஸ் கட்டளை!

ஆர்.எஸ்.எஸ் போல பாமகவினர் பணியாற்ற வேண்டுமென அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

தேர்தல் ஆணையத்தின் விதிப்படி அரசியல் கட்சிகள் வருடத்திற்கு ஒருமுறையாவது பொதுக் குழுவை நடத்த வேண்டும். அந்த வகையில் பாமக பொதுக் குழு கூட்டம் அக்கட்சியினுடைய நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இணைய வழியாக இன்று நடந்தது. கூட்டத்தில் 2021 சட்டமன்றத் தேர்தல், 20 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.


தேர்தல் கருத்துக்கணிப்புக்கு தடை விதிக்க வேண்டும், சட்டமன்ற தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு பற்றி முடிவெடுக்க ராமதாஸுக்கு அதிகாரம், தமிழக அரசு பணிகளை தமிழர்களுக்கு வழங்கவேண்டும் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் பாமக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.


பொதுக் குழுவில் பேசிய ராமதாஸ், பாமகவை ஆரம்பித்து 31 ஆண்டுகள் ஆகிவிட்டது. இருந்தாலும் நம்மிடம் ஒரு எம்.எல்.ஏ, ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லை. கட்சி தொடங்கிய 1989ஆம் ஆண்டு அடுத்த 4 மாதங்களில் வந்த தேர்தலில் 6.5 சதவிகித வாக்குகளை வாங்கினோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 5.6 சதவிகிதம் வாக்கு வங்கிதான் கிடைத்துள்ளது என்று வேதனை தெரிவித்தார்.


உங்களை சரியாக வழிநடத்தவில்லையோ என்று யோசிப்பேன். ஆனால் அனைத்து விதத்திலும் பயிற்சி கொடுத்துவிட்டேன். அப்படியெனில் தோல்விக்கு காரணம் யார் என்றால் நிர்வாகிகள்தான். மக்களவைத் தேர்தலில் சரிவர பணியாற்றாததால் தருமபுரியில் அன்புமணி தோற்றார் என்று குற்றம்சாட்டிய ராமதாஸ், தேர்தலில் தனியாக நின்று 25 தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டால் ஏன் கட்சி நடத்த வேண்டும் என்று கேள்வியை எழுப்பினார்.

read more: முன்கூட்டியே சட்டமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை: சத்திய பிரதா சாஹு


அரசியல் மாற்றம் என்ற எனது நீண்ட நாள் கனவு கனவாகவே போகுமோ? என்னுடைய வாழ்க்கையில் அரசியல் மாற்றத்தை காண முடியாதா என உருக்கமான கேள்வியை முன்வைத்ததோடு, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கண்ணுக்குத் தெரியாமல் தேர்தல் வேலைகளைச் செய்வார்கள். அந்த அமைப்பை போல் பாமகவினர் திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என பொதுக் குழுவில் பேசினார்.

Exit mobile version