24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்: தயாநிதிக்கு பாமக நோட்டீஸ்!

தயாநிதி மாறன் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டுமென பாமக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் திமுகவின் முன்னணி தலைவர்கள் அனைவரும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதிகளில் மக்களை சந்தித்து வந்தார்.


அப்போது செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன், மக்களவைத் தேர்தலில் 400 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டுதான் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்தது. இப்போது திமுக கூட்டணிக்கு வருவதற்கு 1,000 கோடி ரூபாய் கேட்கும். பணம் கொடுத்து கூட்டணியில் சேர்க்கும் அளவுக்கு திமுகவிடம் கோடிகள் இல்லை. கொள்கைகள் மட்டுமே இருக்கிறது என்று பேசினார்.


இதற்கு பாமகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து தயாநிதி மாறன் சேலம் செல்லும் வழியில் கறுப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், அவரது காரையும் தாக்கி சேதப்படுத்தினர். இதனால் மாற்று வாகனத்தில் சேலம் சென்ற தயாநிதி மாறன், அங்கிருந்து ரயில் மூலம் சென்னை சென்றார்.

read more: ரஜினி, கமலுக்கு விழும் அடியில் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது: சீமான்

இந்த நிலையில் தயாநிதி மாறன் மன்னிப்பு கேட்க வேண்டுமென நோட்டீஸ் அனுப்பியுள்ளது பாமக. பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி சார்பில் வழக்கறிஞர் பாலு அனுப்பிய நோட்டீஸில், பாமக பற்றியும் அதன் நிறுவனர் ராமதாஸ் குறித்தும் அவதூறு பரப்பும் நோக்குடன் பொய்யான செய்திகளை உள்நோக்கத்துடன் வெளியிட்ட திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் அதற்காக 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; அவ்வாறு கேட்காவிட்டால் அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version