பாமக: தேர்தல் பற்றி முடிவெடுக்க ராமதாஸுக்கு அதிகாரம்!

சட்டமன்றத் தேர்தல் குறித்து முடிவெடுக்க ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கி பாமக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பாமகவின் பொதுக் குழு கூட்டம் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. நிகழ்வில் தொடக்க உரையாற்றிய ராமதாஸ், நிர்வாகிகள் சரிவர வேலை செய்யாததே பாமகவின் தோல்விக்கு காரணம் என குற்றம்சாட்டினார். 25 தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை எனில் எதற்கான கட்சி நடத்த வேண்டும் என்ற அவர், அரசியல் மாற்றம் என்ற எனது நீண்ட நாள் கனவு கனவாகவே போகுமோ? என்னுடைய வாழ்க்கையில் அரசியல் மாற்றத்தை காண முடியாதா? என வேதனையோடு குறிப்பிட்டார்.


முன்னதாக பொதுக் குழுவில் 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் குறித்து முடிவெடுக்க ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்தியாவில் நடத்தப்படும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் மக்களின் மனநிலையை எதிரொலிப்பதற்கு மாற்றாக, ஒரு சார்பினருக்கு ஆதரவாக கருத்தை திணிக்கும் வகையில் தான் நடத்தப்படுகின்றன.


ஆகவே, தேர்தல் கணிப்புகளை தடை செய்யவும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை அவற்றின் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசையும், இந்திய தேர்தல் ஆணையத்தையும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


வன்னியர்களுக்கு 20 சதவிகித தனி இடஒதுக்கீடு உடனடியாக வழங்க வேண்டும் எனவும், விவசாயிகள் போராட்டத்திற்கு சுமூக தீர்வு காணப்பட வேண்டும், தமிழ்நாட்டில் அரசுப் பணிகள் தமிழர்களுக்கே, தனியார் வேலைவாய்ப்புகளில் 80% தமிழர்களுக்கே வழங்க சட்டம் இயற்ற வேண்டும், சென்னை – சேலம் இடையிலான 8 வழிச் சாலைத் திட்டத்தை கைவிட வேண்டும், காவிரி – கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறவேற்றப்பட்டது.

read more: தமிழகத்தில் ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முழு விவரம்!


ஆன்லைன் கந்துவட்டி செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும், பேரறிவாளன் விடுதலைக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்கவேண்டும், தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என மொத்தமாக 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Exit mobile version