பாமக மாவட்ட செயலாளர் தேவமணி மீது பலமுறை கொலை முயற்சி நடந்துள்ள நிலையில், இந்த முறை அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நல்லாறு பகுதியைச் சேர்ந்தவர் தேவமணி (53). இவர் காரைக்கால் மாவட்ட பாமக செயலாளராகவும், திருநள்ளாறு தொழிற்சாலைகள் சங்க கெளரவ தலைவராக பதவி வகிந்து வந்துள்ளார். திருநள்ளார் மெயின் சாலை சுரக்குடி சந்திப்பு அருகேயுள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார். திருநள்ளாறு தேரடி சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து, நேற்று இரவு சுமார் 10.20 மணியளவில் தனது வீட்டுக்கு ஆதரவாளர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் தேவமணி புறப்பட்டுச் சென்றிருக்கிறார். ஆதரவாளர் பைக்கை ஓட்ட, தேவமணி பின்புறம் அமர்ந்துள்ளார்.
அப்போது அவரை சில அடையாளம் தெரியாத நபர்கள் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்துள்ளனர். தேவமணி அவரது வீட்டின் அருகே சென்ற நிலையில், திடீரென அவரை சரமாரியாக வெட்ட ஆரம்பித்துள்ளனர். கை, தலை மற்றும் உடலில் பல இடங்களில் சரமாரியாக வெட்டப்பட்ட தேவமணி, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்தில் பலியானார். இந்த கொடூர சம்பவத்தைக் கேள்விப்பட்டு குவிந்த தேவமணியின் ஆதரவாளர்கள் குவிந்ததால் திருநள்ளாறில் பதற்றம் நிலவியது. இதனையடுத்து திருநள்ளாறு சாலை மற்றும் தேவமணி வீடு, கட்சி அலுவலகம் அருகே பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேவமணியின் உடல் பிரதேச பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக திருநள்ளாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேவமணி கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாகவும், முன்னேச்சரிக்கை நடவடிக்கையாகவும் திருநள்ளாறு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா அறிவித்துள்ளார்.
தேவமணி ரியல் எஸ்டேட் தொழிலும் ஈடுபட்டு வந்ததால், நிலத்தகராறு காரணமாக அவரை யாராவது கூலிப்படையை ஏவி விட்டு கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தேவமணி மீது பலமுறை கொலை முயற்சி தாக்குதல் நடைபெற்று உள்ளதும், அதிலிருந்து அவர் தப்பியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.