அரசாங்கப் பணத்தில் தேர்தலுக்கு லஞ்சம்: முத்தரசன் விமர்சனம்!

தேர்தல் நேரத்தில் அரசாங்கப் பணத்தில் லஞ்சம் அளிப்பது போல பொங்கல் பரிசு வழங்கப்படுவதாக முத்தரசன் குற்றம்சாட்டினார்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். அவ்வகையில் 2021ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார் முதல்வர். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500 மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என அவர் கூறினார்.


சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் சுயநலத்துக்காக முதல்வர் பழனிசாமி பொங்கல் பரிசு அறிவித்துள்ளாரா என்ற கேள்வியை முன்வைத்தார் திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால், கொரோனா, புயல், கனமழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு நிதி வழங்குவது தவறா என்று பதில் கேள்வியை எழுப்பினார். திமுகவைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் முதல்வர் மீது குற்றம்சாட்டியுள்ளது.

read more: ரஜினியை கட்டாயப்படுத்தி கட்சி ஆரம்பிக்க வைக்கிறார்கள்: ஸ்டாலின் மறைமுக விமர்சனம்!
இன்று செய்தியாளர்களை சந்தித்த சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், டெல்டா பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் நிவாரணத் தொகை அறிவிக்கவில்லை எனவும், ஆனால், இப்போது பொங்கல் பரிசாக 2,500 ரூபாயை அறிவித்திருக்கிறார் என்றும் சுட்டிக்காட்டினார்.


தேர்தலுக்காக அரசின் பணத்தை எடுத்து லஞ்சமாக தனக்கு வாக்களியுங்கள் என்பது போல இருக்கிறது அவரின் அறிவிப்பு என்ற முத்தரசன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்ய முன்வராமல், அரசின் பணத்தை தவறாக பயன்படுத்தி அரசியல் ஆதாயம் பெறலாம் என்னும் முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாது எனவும் விமர்சித்தார்.

Exit mobile version