அஞ்சல் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்: மத்திய அரசு அறிவிப்பு!

தமிழகத்தின் எதிர்ப்பை அடுத்து, அஞ்சல் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு அஞ்சல் துறையில் போஸ்ட்மேன் பதவிகளுக்கு வெளியிட்ட அறிவிப்பில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே தேர்வு நடைபெறும் என அறிவித்தது. இதற்கு எழுந்த எதிர்ப்புகளையும் மீறி தேர்வுகள் நடத்தப்பட்டன. இதுதொடர்பான வழக்கில், தேர்வு முடிவுகளை வெளியிட நீதிமன்றம் தடை விதித்தது.


தமிழக எம்.பி.க்கள் இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பினர். அஞ்சல் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்றும்மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார். அதன் பின்னர் அந்தத் தேர்வு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட்டது.


சமீபத்தில் அஞ்சல் துறைக்கு கணக்கர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே இந்தத் தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மீண்டும் தற்போது கண்டனக் குரல்கள் வலுக்கத் தொடங்கின. மத்திய அரசு தனது உறுதியை மீறிவிட்டதாக தமிழக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மார்க்சிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் ஆகியோர் கடிதம் எழுதினார்.


இந்த நிலையில் வெங்கடேசனுக்கு பதில் கடிதம் எழுதியுள்ள அஞ்சல் அமைச்சகம், ”அஞ்சல் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தமிழக பகுதிகளில் தமிழ் மொழியில் அஞ்சல் தேர்வுகளை எழுதலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

read more: என் மனைவி போகாத கோயில்களே இல்லை: ஸ்டாலின்


இதற்கு நன்றி தெரிவித்துள்ள வெங்கடேசன், தமிழ் நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வுகள் தமிழிலும் நடத்தப்பட வேண்டுமென நான் எழுதிய கடிதத்துக்கு மத்திய அரசு பதில் வழங்கியுள்ளது. எனது கோரிக்கையை ஏற்று தமிழில் எழுத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகிழ்வும் நன்றியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version