எம்.ஜி.ஆரை உரிமை கொண்டாடுபவர்கள் அவருக்கான என்ன செய்திருக்கிறார்கள் என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார பயணத்தில் நாகர்கோயிலில் பேசும்போது, ‘நான் எம்.ஜி.ஆரின் நீட்சி’ என்றார். இதற்கு அதிமுக சார்பில் அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சர்ச்சை தமிழக முதல்வரே கமல்ஹாசனை தாக்கிப் பேசும் அளவுக்கு விரிவடைந்திருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் மதுரவாயலில் கல்லூரி வளாகத்தில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்துப் பேசும்போது, “நான் எம்ஜிஆர் ஆட்சியை அமைப்பேன்” என்றார். ஏற்கனவே தேமுதிக தலைவர் விஜயகாந்தை அக்கட்சியினுடைய தொண்டர்கள், கறுப்பு எம்.ஜி.ஆர் என அழைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னையில் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் தன்னை எப்போது கறுப்பு எம்.ஜி.ஆர் என்று சொன்னதில்லை. எம்.ஜி.ஆர் போல மக்களுக்கு உதவுகிறார் என்பதற்காக தேமுதிக தொண்டர்களும், மக்களும் அவரை அவ்வாறு அழைக்கிறார்கள் என்று விளக்கம் அளித்தார்.
read more: மோடியே வந்தாலும்..கிராம சபையில் ஸ்டாலின் சவால்!
எம்.ஜி.ஆரை தனது குருவாக ஏற்றுக்கொண்டவர் விஜயகாந்த் என்றும், இதனை நடிகராக இருந்தபோதே பல மேடைகளில் அவர் கூறியிருப்பதாகவும் பிரேமலதா சொன்னார். மேலும், எம்.ஜி.ஆர் காது கேளாதோர் பள்ளிக்கு 25 ஆண்டுகளாக விஜயகாந்த் உதவி செய்து வருகிறார். எம்ஜிஆரை உரிமை கொண்டாடுபவர்கள் அவருக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்ற கேள்வியை ரஜினி, கமலை நோக்கி முன்வைத்தார்.