4 நாள் மத்திய ஆசிய பயணம் இன்று தொடக்கம்; வர்த்தகம், முதலீடு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் முக்கிய பேச்சுவார்த்தை
பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாள் பயணமாக இன்று உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்குப் புறப்படுகிறார். பயணத்தின் முதல் கட்டமாக உஸ்பெகிஸ்தான் செல்லும் அவர், அந்நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவின் அழைப்பை ஏற்று ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்கள் பிரதமர் மோடி தாஷ்கண்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தானுக்கு மேற்கொள்ளும் நான்காவது பயணம் இதுவாகும்.
என்னென்ன பேசப்படுகிறது?
பிரதமர் மோடி – அதிபர் மிர்சியோயேவ் இடையே பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தியா – உஸ்பெகிஸ்தான் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, டிஜிட்டல் இணைப்பு, எரிசக்தி, கல்வி மற்றும் இருநாட்டு மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தற்போது நிலவும் ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்ய உள்ளனர்.
இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் தற்போது சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் இருப்பதாக மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவம், சுரங்கம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
‘வளர்ச்சியடைந்த இந்தியா 2047’ மற்றும் ‘Uzbekistan-2030’ ஆகிய இரு நாடுகளின் வளர்ச்சி இலக்குகள் குறித்தும் தலைவர்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள உள்ளனர்.
அடுத்து கிர்கிஸ்தான் உஸ்பெகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் செல்கிறார். ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறும் 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் பாதுகாப்பு, Connectivity மற்றும் Opportunity ஆகியவற்றில் இந்தியாவின் முன்னுரிமைகளை பிரதமர் எடுத்துரைக்க உள்ளார்.
SCO உச்சி மாநாட்டுக்கு இடையே உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு சந்திப்புகளையும் நடத்த உள்ளார்.
மேலும் மத்திய ஆசியாவின் கலாசார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் 6-வது World Nomad Games தொடக்க விழாவிலும் பிரதமர் பங்கேற்க உள்ளார். 2017 முதல் SCO அமைப்பின் முழு உறுப்பினராக இந்தியா இருந்து வரும் நிலையில், இந்த ஆண்டு அந்த அமைப்பு தனது 25-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.
