விசாரணைக்கு வரும் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு

சொத்து குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு தடைகோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு வரும் 16ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2013ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அதில், வருமானத்திற்கு அதிகமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 7 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை என கூறிபுகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில், கடந்த மார்ச் 4ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள் எம்.சத்தியநராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். அதாவது, நீதிபதி சத்தியநாராயணன் சொத்து குவிப்பு புகார் குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். ஆனால் நீதிபதி ஹேமலதா காலதாமதமான வழக்கை மேற்கொண்டு விசாரிப்பதால் எவ்வித பலனும் இல்லை என்று கூறி மகேந்திரன் வழக்கை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தனர். இரு வேறு தீர்ப்பு வழங்கப்பட்டதால், இந்த வழக்கில் 3வது நீதிபதி கருத்தை அறிய வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. இந்நிலையில் 3வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும் வழக்கு விசாரணைக்கு தடைகோரியும் ராஜேந்திர பாலாஜி கடந்த 19ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இதை தொடர்ந்து, இவ்வழக்கில் தமிழ்நாடு அரசும் செப்டம்பர் 3ம் தேதி கேவிட் மனு அளித்தது. இந்நிலையில், இவ்வழக்கு வரும் 16ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள பட்டியலிடப்பட்டுள்ளது.

Exit mobile version