புரேவி புயல் தொடர்பாக முதல்வரிடம் மோடி மற்றும் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்கள்.
தெற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்ததை அடுத்து அதற்கு புரெவி எனப் பெயரிடப்பட்டது. இந்த புரெவி புயலானது நேற்று இரவு திரிகோணமலை அருகே புயல் கரையைக் கடந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது பாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் இருக்கும் புரெவி புயல், இன்று இரவு அல்லது நாளை அதிகாலை பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் கன மழை கொட்டித் தீர்க்கிறது. தென் மாவட்டங்களில் மட்டுமே கன மழை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னை உள்பட வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடியிலிருந்து செல்லும் விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன. பேரிடர் மீட்புப் படையினர் தென் தமிழகத்தில் முகாமிட்டுள்ளனர்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பேசினார். புயலில் இருந்து மக்கள் காப்பாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மீனவர்கள் சூழ்நிலை குறித்து முதல்வர் அவரிடம் எடுத்துரைத்தார். பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக முதல்வர் உடன் தொலைபேசியில் பேசினேன். புரெவி புயல் காரணமாக மாநிலத்தின் சில பகுதிகளில் நிலவும் சூழல் குறித்து ஆலோசித்தோம். தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களின் நலனுக்காக பிரார்த்திக்கிறேன்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதுபோலவே உள் துறை அமைச்சர் அமித் ஷாவும், தமிழக முதல்வரிடம் இன்று காலை தொலைபேசி மூலம் பேசி புயல் நிலவரங்களை விசாரித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று (3.12.2020) காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தார்.
அப்பொழுது முதல்வர் பழனிசாமி, புரெவி புயல் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவரித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டிற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்’” என்று கூறப்பட்டுள்ளது.