ஹத்ராஸ் சம்பவம் மோடி மௌனம் காப்பது ஏன்? ராகுல் காந்தி கேள்வி…

உத்தரபிரதேசத்தின் ஹத்ராசில் பட்டியல் இனத்தை சேர்ந்த இளம்பெண் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் நடந்த டிராக்டர் பேரணியில் கலந்து கொண்ட அவர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஒரு குழந்தை கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த நிர்வாகமும் அவரது குடும்பத்தையே தாக்கி வருகிறது. நாட்டின் பிரதமர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை’ என்று தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் சர்வதேச சதி இருப்பதாக மாநில அரசு கூறியிருப்பது பற்றி கேட்டதற்கு, ‘யோகிஜி தனது கருத்தை கூறியிருக்கிறார். நான் அங்கு பார்த்தது என்னவென்றால், ஒரு அருமையான சிறுமி கற்பழித்து, கழுத்து உடைக்கப்பட்டு கொல்லப்பட்டு உள்ளார். இதை செய்த நபர்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தை மிரட்டி வருகின்றனர். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று கூறினார்.

மேலும் இந்த கொடூர சம்பவத்தை ஒரு ‘சோகம்’ என யோகி ஆதித்யநாத் கூறியிருக்க வேண்டும் என கூறிய ராகுல் காந்தி, இதை சர்வதேச சதியாக அவர் பார்த்தால் அப்படியே இருக்கட்டும் எனவும், அது அவரது தனிச்சிறப்பு என்றும் அவர் தனது செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Exit mobile version