ரஜினியுடன் மோத நாம் தமிழர் கட்சி முடிவெடுத்துவிட்டதாக சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாகவும், டிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் அறிவித்தார். கட்சியின் மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜக அறிவுஜீவிகள் பிரிவு அர்ஜுன மூர்த்தியையும் ரஜினி நியமனம் செய்தார்.
பாஜகவில் தூண்டுதல் காரணமாகவே ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்துள்ளதாக அவரை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.இந்த நிலையில் அம்பேத்கரின் 64ஆம் நினைவு நாளான இன்று சென்னை நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு சீமான் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதாக முடிவு செய்துவிட்டதால் நாங்களும் மோதலாம் என்று முடிவு செய்துவிட்டோம் என்று கூறினார்.
45 ஆண்டுகளுக்கு மேலாக ரஜினி மன்றத்தை வழிநடத்தும் நிர்வாகிகளில் ஒருவர் கூடவா கட்சியை வழிநடத்தத் தகுதி பெறவில்லை. பாஜகவைச் சேர்ந்த அர்ஜுன மூர்த்தியை வைத்துக்கொண்டு சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியலை எப்படி கொடுப்பார் என்று கேள்வி கேட்ட சீமான்,
காங்கிரஸில் இருந்து வந்த தமிழருவி மணியனையும் பாஜகவில் இருந்து வந்த அர்ஜுனமூர்த்தியையும் வைத்து ரஜினி எப்படி மாற்றத்தை ஏற்படுத்துவார். அழுத்தத்தின் காரணமாகத்தான் ரஜினி இந்த முடிவுக்கு வந்துள்ளார் என்று குற்றம்சாட்டினார்.
60 நாளில் ஆங்கிலம் கற்பது எப்படி என்பது போல அவரது கட்சி தொடக்க அறிவிப்பு உள்ளது. ஜனவரியில் கட்சி ஆரம்பித்து அடுத்த சில மாதங்களில் அவரை முதல்வராக்கிவிட வேண்டுமா? மக்களின் எந்தப் பிரச்சினைக்கு ரஜினிகாந்த் குரல் கொடுத்துள்ளார். நாட்டுக்கு மக்களுக்கு அவர் தேவையில்லை. பாஜகவுக்குதான் ரஜினிகாந்த் தேவைப்படுகிறார் என்றும் சாடினார் சீமான்