சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் ஆதரவு அதிமுகவுக்குதான் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் அமைச்சர்கள்.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருவதாக 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் கொரோனா பாதிப்பு அபாயம் கருதி அவர் கட்சி ஆரம்பிக்கமாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும் உயிரே போனாலும் சந்தோஷம்தான் என கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்தார்.
இதனிடையே அவர் நடித்த அண்ணாத்தே படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ரஜினிகாந்துக்கு நெகட்டிவ் என்றபோதிலும் சீரற்ற ரத்த அழுத்தம் காரணமாக மூன்று நாட்கள் ஐதராபாத் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் தான் கட்சி ஆரம்பிக்கவில்லை எனவும், இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
read more: ரூ.1,800 கோடி முதலீடுதான் வந்ததா? முதல்வரை சீண்டிய ஸ்டாலின்
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், உடல்நிலை குறித்து தெரிவித்திருப்பதால் கருத்து கூற விரும்பவில்லை. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராவிட்டாலும அவரின் ஆதரவு என்றும் அதிமுக விற்கு இருக்கும் என நம்புகிறோம். அவர் அதிமுகவுக்கு ஆதரவளிப்பார், திமுகவுக்கு ஆதரவளிக்க மாட்டார் எனத் தெரிவித்தார்.
அமைச்சர் கடம்பூர் ராஜு, ரஜினிகாந்தின் முடிவு என்பது அவருடைய தனிப்பட்ட உரிமை சார்ந்தது. அவரது முடிவு தேர்தல் களத்தில் எந்த பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ரஜினி தேர்தல் சமயத்தில் அதிமுகவுக்கு குரல் கொடுத்தால் ஏற்றுக்கொள்வோம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.