ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது? மருத்துவமனை தகவல்!

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது என்பது இன்று பிற்பகலில் முடிவு செய்யப்படும் என மருத்துவமனை தெரிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்தே திரைப்பட படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. விரைவில் ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிப்பதால் வெகு வேகமாக படப்பிடிப்பு நடந்துவந்தது. சமீபத்தில் அண்ணாத்தே குழுவில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் உடனடியாக படபிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர் ரஜினிகாந்துக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது.


நேற்று முன்தினம் காலை ஐதராபாத்திலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினிகாந்த். சீரற்ற ரத்த அழுத்த பிரச்சினை காரணமாக ரஜினிகாந்த் கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலம் பெற வேண்டி தலைவர்கள், திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.


அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தின் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் அனைத்தும் வந்துவிட்டன என்றும் அவற்றில் கவலைப்படும்படி எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது. அத்துடன், இன்று மதியம் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின்னர் டிஸ்சார்ஜ் குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோலவே ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணா, ரஜினிகாந்த் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. இன்று மாலை டிஸ்சார்ஜாகி சென்னை திரும்புவார். திட்டமிட்டப்படி ரஜினி அரசியல் கட்சி தொடங்குவார்“ என்றும் கூறியுள்ளார்.

Exit mobile version