ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கமாட்டார்-எல்.கே.சுதீஷ் பேட்டி

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கமாட்டார் என்று எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் நடைபெற்ற தே.மு.தி.க. நிர்வாகிகள் கூட்டத்தில், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது:-
தேர்தல் கூட்டணி
தமிழகத்தில் தே.மு.தி.க. தேர்தல் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தை தருமபுரியில் தொடங்கியுள்ளோம். எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் கருத்தைக் கேட்டறிந்துதான் முடிவு செய்வோம்.

கட்சி தொடங்க மாட்டார்
வரும் ஜனவரி மாதம் கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு, கட்சியின் நிலைப்பாடு குறித்து தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார். சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு விஜயகாந்த் கண்டிப்பாக வருவார். என்னைப் பொறுத்தவரை ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியல் கட்சி தொடங்க மாட்டார். தொடங்கப்போவதும் இல்லை.

வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கு தேமுதிக ஆதரவு தெரிவித்துள்ளது. விவசாயிகளுக்கு தே.மு.தி.க. எப்போதும் ஆதரவாக இருக்கும்.
ஏழு தமிழர்கள் விடுதலை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் எனத் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏற்கெனவே தமிழக ஆளுநருக்கு அழுத்தம் தந்துள்ளார். இக்கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

Exit mobile version