தமிழக சட்டமன்றத் தேர்தலை நடத்த ஆகும் செலவு தெரியுமா?

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்கு 621 கோடி ரூபாய் செலவாகும் என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தின் பதவிக் காலம் வரும் மே 24ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. இதனால் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் வந்த இந்தியத் தேர்தல் ஆணைய தலைமை செயலர் உமேஷ் சின்ஹா அடங்கிய குழு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் பற்றி ஆலோசனை மேற்கொண்டது.


திமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த கோரிக்கை விடுத்தன. இதேபோல மே மாதம் கடும் வெயிலாக இருக்கும் என்பதால் முன் கூட்டியே தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திடம் அதிமுக கோரிக்கை வைத்தது.
ஆனால், கூடுதல் வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டி இருப்பதால் தமிழகத்தில் முன் கூட்டியே தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தமிழக தேர்தல் அதிகாரி மறுத்தார். கொரோனா காரணமாக தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாக அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்தார்.


இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு, மத்திய அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், பீகாரை போல தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்த அறிவுறுத்தியுள்ளோம் எனக் கூறினார்.

read more: பொங்கல் நேரத்தில் 700 தூய்மை பணியாளர்கள் வேலை நீக்கம்: திமுக, அமமுக எதிர்ப்பு!


கொரோனா காலம் என்பதால் தேர்தல் செலவு அதிகரிக்கக் கூடும் என விவரித்த தேர்தல் அதிகாரி, “தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்கு 621 கோடி ரூபாய் செலவாகும். அதற்குரிய தொகையை தமிழக அரசிடம் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது” என்றார்.

Exit mobile version