ரயில்வே துறை கோரிக்கைகளை அளித்த எஸ்.ஜி.சூர்யா

தமிழ்நாட்டின் ரயில்வே துறை சார்ந்த முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவைச் சந்தித்து பா.. மாநில செயலாளர் முனைவர் SG சூர்யா அளித்தார்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ரயில்வே தொடர்பான கோரிக்கைகளை அந்தந்த பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெற்ற மனுக்களின் அடிப்படையில், ரயில்வே அமைச்சரிடம் ஒருங்கிணைந்த கோரிக்கை மனுவாகத் தயாரித்து, தெற்கே கடம்பூர், வடக்கே குடியாத்தம், அரக்கோணம், மற்றும் சிதம்பரம் உள்ளிட்ட  பகுதிகளைச் சேர்ந்த ரயில்வே தொடர்பான கோரிக்கை மனுக்களை அமைச்சரிடம் வழங்கினார் எஸ்.ஜி.சூர்யா. கோரிக்கையின் விபரம் கீழே..

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் ரயில் நிலையத்தில் மீண்டும் ரயில்கள் நின்று செல்ல வேண்டும்

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவின் முதன்மை ரயில் நிலையமாக இருக்கிறது கடம்பூர் ரயில் நிலையம்.  கோவிட் தொற்று ஊரடங்குக்கு முன்பு கடம்பூர் ரயில் நிலையத்தில் பல முக்கிய ரயில்கள் நின்று சென்றன. இதனால் அப்பகுதி மக்களுக்கு வசதியாக இருந்தது. ஊரடங்கு  காலத்தில் கடம்பூரியில் ரயில் நிறுத்தப்படுவது நிறுத்தப்பட்டது. ஊரடங்கு முடிந்த பிறகு மீண்டும் இங்கு ரயில்கள் நின்று செல்லும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நிறுத்தம் ரத்து செய்யப்பட்ட நிலையே நீடிக்கிறது.

கடம்பூர் ரயில் நிலைத்துக்கு  மாற்று ரயில் இணைப்பு இல்லை. புதிய நடைமேடை கட்டுமானம் மற்றும் நவீனமய வசதிகள் என  உள்கட்டமைப்பு மேம்பாடுகள் இருந்தபோதிலும், ரயில் நிறுத்தத்தை ரத்து செய்தது இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சியை கணிசமாக பாதித்துள்ளது. மாணவர்கள், தொழிலாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட தினசரி ரயில் போக்குவரத்தை நம்பியுள்ள ஏராளமான கடம்பூர் மற்றும் சுற்றுப் புற வாசிகளுக்கு சிரமம் ஏற்பட்டிருக்கிறது. இது உள்ளூர் வணிக மற்றும் கல்வி வாய்ப்புகளையும் பாதித்துள்ளது. எனவே,

1.16235/16236 தூத்துக்குடி – மைசூர் எக்ஸ்பிரஸ்

2. 20635/20636 அனந்தபுரி எக்ஸ்பிரஸ்

3. 20691/20692 தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா SF எக்ஸ்பிரஸ்

4. 22667/22668 நாகர்கோவில் – கோயம்புத்தூர் SF எக்ஸ்பிரஸ்

ஆகிய ரயில்கள் கடம்பூரில் நின்று செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும்!

சுமார் ஐந்தரை லட்சம் மக்கள் தொகை கொண்டுள்ள வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரத்தில் அமைந்துள்ள குடியாத்தம் ரயில் நிலையம்,  நாடு முழுதுமுள்ள அதிக பயன்பாடு மிக்க 541 ரயில் நிலையங்களில் 87 ஆவது இடத்தில் இருக்கிறது. 2023–24 நிதியாண்டில் ₹360 கோடி வருடாந்திர வருவாயைப் பதிவு செய்துள்ளது.

இத்தகைய குடியாத்தம் ரயில் நிலையத்தில் நேரடி மற்றும் மறு பயணங்களுக்கான ரயில் நிறுத்தமாக அறிவிக்க வேண்டுகிறேன். குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றியுள்ள 350க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், டாக்டர்கள், நர்ஸுகள், மத்திய-மாநில அரசு ஊழியர்கள்  உட்பட நூற்றுக்கணக்கான தினசரி பயணிகளுக்கு  குடியாத்தம் ரயில் நிலையம் மையமாக செயல்படுகிறது. மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, பின்வரும் முக்கியமான ரயில்கள் குடியாத்தம்  ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும்.

1 12695/12696 திருவனந்தபுரம் மத்திய SF எக்ஸ்பிரஸ்

2 12675/12676 கோவை எக்ஸ்பிரஸ்

3 12685/12686 மங்களூர் SF எக்ஸ்பிரஸ்

4 16339/16340 நாகர்கோயில் – மும்பை CSMT எக்ஸ்பிரஸ்

5 12607/12608 லால்பாக் SF எக்ஸ்பிரஸ்

6 22625/22626 SBC Dbldeck எக்ஸ்பிரஸ்

7 16219/16220 சாம்ராஜ்நகர் திருப்பதி எக்ஸ்பிரஸ்

8 22649/22650 ஏற்காடு SF எக்ஸ்பிரஸ்

9 13351 தன்பாத் – ஆலப்புழா எக்ஸ்பிரஸ்

ராணிப்பேட்டை மாவட்டம் அனவர்திகான் பேட்டை  ரயில் நிலையத்தில் முக்கிய ரயில்கள்  நின்றிட வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள  அரக்கோணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அனவர்திகான்பேட்டை ரயில் நிலையம். இது தெற்கு ரயில்வே பகுதியில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இங்கிருந்து  தினமும் கணிசமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வெளி நகரங்களுக்கு பயணம் செய்கிறார்கள். இத்துடன், அனவர்திகான்பேட்டை ரயில் பயணிகள் சங்கம் மற்றும் அரக்கோணம் & நெமிலி யூனியன் அனைத்து பஞ்சாயத்து தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் ஆகியோர் இந்த ரயில் நிலையம் தொடர்பான முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

அதாவது நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் உள்ளிட்டோரின் நலனை கருத்தில்கொண்டு அனவர்திகான்பேட்டை (AVN) ரயில் நிலையத்தில்

1 66019/66020 அரக்கோணம்-சேலம்

2 12609/12610 மைசூர் SF எக்ஸ்பிரஸ்

ஆகிய ரயில்களை அனவர்திகான் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்  நிலையை ஏற்படுத்திட வேண்டும்.

ஜன் சதாப்தி ரயிலை சிதம்பரம் வரை நீட்டித்திட வேண்டும்

தற்போது தமிழ்நாட்டின் கோவை – மயிலாடுதுறை இடையே 12083/12084 ஜன் சதாப்தி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை வரையிலான இந்த ரயிலை அருகாமை நகரான சிதம்பரம் வரை நீட்டித்து இயக்கிட வேண்டும்.

சிதம்பரம் புகழ்பெற்ற நடராஜர் கோயில் மற்றும் மதிப்புமிக்க அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றின்  தாய் மண். ஒவ்வொரு ஆண்டும், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேருகிறார்கள். சிதம்பரத்தில் வசிக்கும் பலர் கோயம்புத்தூரில் பணிபுரிகிறார்கள், மேலும் கோயம்புத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த  ஏராளமான பக்தர்கள் நடராஜர் கோயிலை தரிசிக்க சிதம்பரத்திற்கு தவறாமல் பயணம் செய்கிறார்கள்.

இதைக் கருத்தில் கொண்டு, ரயில் எண். 12083/12084 கோவை–மயிலாடுதுறை ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸை சிதம்பரம் வரை நீட்டிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த நீட்டிப்பு மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பக்தர்களுக்கு  பெரிதும் பயனளிக்கும்.

ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் சமீபத்தில் ICF பெட்டிகளிலிருந்து LHB பெட்டிகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இவை முந்தைய 100 கிமீ/மணி வேக வரம்பிற்கு மாறாக, மணிக்கு 160 கிமீ/மணி வேகத்தில் இயங்கக்கூடியதாக மேம்படுத்தப்பட்டுள்ளன. எனவே மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் வரை இந்த ரயிலை நீட்டிப்பது நேரம், தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமானதே.

இந்த கோரிக்கை  2023-ஆம் ஆண்டில் தெற்கு ரயில்வே, திருச்சிராப்பள்ளி கோட்டத்தால் சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்திற்கும் இணங்குகிறது. இதை அவசர தேவையாக நிறைவேற்றுமாறு சிதம்பரம் ரயில் பயணிகள் நல சங்கத்தின் முறையான  கோரிக்கை மனுவும் ரயில்வே அமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை பரிசீலித்து,  ஜன் சதாப்தி ரயிலை சிதம்பரம் வரை நீட்டித்திட வேண்டும் என எஸ்.ஜி.சூர்யா கோிக்கை விடுத்துள்ளார். மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாய் உறுதி தந்துள்ளார் மத்திய ரயில்வே அமைச்சர்.

Exit mobile version