சசிகலா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்!

பெங்களூரு மருத்துவமனையில் சசிகலா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனைக் காலம் முடியவுள்ளதை அடுத்து வரும் 27ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையாகிறார். இந்த நிலையில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் நேற்று மாலை பெங்களூரு பவரிங் மருத்துவமனையில் சசிகலா அனுமதிக்கப்பட்டார்.


அவருக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் அறிகுறி தென்படுவதால் ஆன்டிஜென் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. சசிகலா சாதாரண வார்டில் சிகிச்சைபெற்று வந்தநிலையில் மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவர்கள் அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து அவசர சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டு சென்றனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


சசிகலாவுக்கு RAPID பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்ட நிலையில் RT-PCRல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா பாதிப்பில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

விடுதலையாகவுள்ள நிலையில் சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதனால் அறிவித்தபடி சசிகலா 27ஆம் தேதி விடுதலை செய்யப்படுவாரா என்ற கேள்வியும் மேலோங்கி நிற்கிறது.

Exit mobile version