மன்னிப்பு கேட்க வேண்டும்: உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்பிய சசிகலா தரப்பு!

உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டுமென சசிகலா தம்பி மகன் ஜெயானந்த் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்றத் தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அரங்க நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி, எடப்பாடி பழனிசாமி அரசை டெட்பாடி ஆட்சி என்றும் சொல்கிறார்கள். ஏனெனில் சசிகலா காலில் விழுந்தபோது டெட்பாடி போலதான் எடப்பாடி பழனிசாமி கிடந்தார் என்று விமர்சித்தார். டேபிள், சேர்குள்ளலாம் புகுந்து விழுந்து கிடந்தார் என்றதோடு, இன்னொரு வார்த்தையைக் கொண்டு விமர்சித்தார்.


இதற்கு தினகரன், வானதி சீனிவாசன், குஷ்பு, காயத்திரி ரகுராம் உள்ளிட்டோர் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இப்போது சசிகலாவின் தம்பி திவாகரன் மகனும், அண்ணா திராவிடர் கழகத்தின் தலைவருமான ஜெயானந்த் திவாகரன், உதயநிதி ஸ்டாலினுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


அதில், சசிகலாவுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் அநாகரீகமான வார்த்தைகளை உதயநிதி பயன்படுத்தியது மிகவும் கண்டனத்திற்குரியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து பணியாற்றி அவர் பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை உருவாக்கியுள்ளார்.

read more: விவாதத்திற்கு நான் ரெடி, நீங்கள் ரெடியா மிஸ்டர் பழனிசாமி: ஸ்டாலின்


சசிகலாவின் அரசியல் வாழ்க்கை காலம்தான் உதயநிதியின் வயது. பொதுவெளியில் சசிகலாவைப் பற்றி பேசியது அவரின் ஆணாதிக்க மனநிலையையும், பெண்களுக்கு மரியாதை அளிக்காதவர் என்பதையும் காட்டுகிறது என்றதோடு, இந்த நோட்டீஸ் கிடைக்கப் பெற்றவுடன் உதயநிதி தனது அவதூறு கருத்தை வாபஸ் பெற்றுக்கொண்டு நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இல்லையெனில் உதயநிதி மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version