சசிகலாவுக்கு அதிதீவிர நுரையீரல் தொற்று

சசிகலா அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைக் காலம் முடியவுள்ளதை அடுத்து சசிகலா வரும் 27ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையாக உள்ளார். இந்த நிலையில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பெங்களூரு பவரிங் மருத்துவமனையில் சசிகலா திடீரென அனுமதிக்கப்பட்டார்.


மூச்சுத் திணறல், காய்ச்சல் காரணமாக அவதிப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிடி ஸ்கேன் எடுப்பதற்காக விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே சசிகலாவுக்கு எடுக்கப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.


இந்த நிலையில் இன்று காலை சசிகலாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் மீண்டும் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், 66 வயதான சசிகலா விக்டோரியா மருத்துவமனையில் நேற்று மதியம் 2.30 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்றிரவு 9.30 மணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

read more: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும்: விவசாய சங்கங்கள்


மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு அதிதீவிர நுரையீரல் தொற்று உள்ளது. அத்துடன், நிமோனியா காய்ச்சல் அதிகமாக இருக்கிறது. விக்டோரியா அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version