சசிகலா குடும்பத்தினரிடம் உள்ள ஏராளமான பணத்தை பயன்படுத்தி ஆதரவு உள்ளதுபோல மாயை ஏற்படுத்துவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகர் ஆகிய மூவரும், 2017 பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கான 4 வருட தண்டனைக் கால விரைவில் முடிவடையவுள்ள சூழலில், சசிகலா ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாகிறார். அவரது விடுதலையை முன்வைத்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என ஆடிட்டர் குருமூர்த்தி ஆலோசனை தெரிவித்த நிலையில், அதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. சசிகலா அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார் என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகக் கூறி வருகிறார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா விடுதலையாகி வெளியே வருவதால் தமிழகத்தில் எந்தவித தாக்கமும் ஏற்படாது. சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் கட்சியில் இல்லாத நிலை என்பதே எங்களின் நிலைப்பாடு. சசிகலாவை சார்ந்தவர்கள் தலையீடு இல்லாமல், கட்சியும், ஆட்சியும் நடத்தப்பட வேண்டும் என்பதே தொண்டர்கள் விருப்பம். ஆகவே எங்களின் நிலையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
read more: தேர்தலில் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்: சரத்குமார்
சசிகலா குடும்பத்திடம் ஏராளமாக பணம் உள்ளதாகவும், அதை வைத்து தங்களுக்கு ஆதரவு இருப்பது போல செயற்கையாக மாயை ஏற்படுத்தலாம் என்று கூறிய அவர், அதனால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. சசிகலா விடுதலையானாலும் யாரும் அவர் பக்கம் போக மாட்டார்கள் என்றார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஆனால், அந்த நிலைமை வராது என்றும் அமைச்சர் கூறினார்.