சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை தகவல்!

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாக உள்ள நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பெங்களூரு பவரிங் மருத்துவமனையில் சசிகலா அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல், காய்ச்சல் காரணமாக அவதிப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.


தற்போது விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு அதிதீவிர நுரையீரல் தொற்று உள்ளதாகவும், நிமோனியா காய்ச்சல் அதிகமாக இருக்கிறது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.


இந்நிலையில் சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்று மாலை அறிக்கை வெளியிட்டது. சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், முன்புக்கு தற்போது சிறிது முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டு உள்ளிட்டவை சீராக உள்ளது. கொரோனா நோய் வழிகாட்டுதல்படி அவருக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

read more: முதற்கட்டமாக 35 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த சீமான்


கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சசிகலா பூரண குணமடைய வேண்டுமென திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். அதேபோல சசிகலா குணமடைய வாழ்த்துவதாக சீமான் தெரிவித்துள்ளார். இதனிடையே விடுதலை நேரத்தில் சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது குறித்து சந்தேகமும் எழுப்பப்பட்டு வருகிறது.

Exit mobile version