சசிகலா என்னை முதல்வராக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி

2017ஆம் ஆண்டு சசிகலா தன்னை முதல்வராக்கவில்லை என தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை வெற்றிநடை போடும் தமிழகம் என்ற பெயரில் துவங்கிவிட்டார். 

அதிமுகவுடனான பாஜக கூட்டணி உறுதிசெய்யப்பட்டு விட்ட நிலையில், மற்ற கட்சிகள் இதுவரை கூட்டணியில் தொடர்வதாகவும் அதிமுக தெரிவித்துள்ளது. இதனிடையே எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டுச் சென்ற சசிகலா இன்னும் இரண்டு வாரங்களில் விடுதலையாகிறார். சசிகலா விடுதலையை முன்வைத்து அதிமுக- அமமுக வட்டாரங்களில் விவாதங்களும் எழுந்துள்ளன. 

இந்த நிலையில்  தி இந்து ஆங்கில நாளிதழ் அவரிடம் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை முன்வைத்து நேர்காணல் செய்துள்ளது. நீங்கள் பிரபலமாக இல்லாத 2017ஆம் ஆண்டு சசிகலாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக காணப்பட்டீர்கள். தற்போதைய பதவிக்காலத்தை நிறைவு செய்ய முடியும், வரும் சட்டமன்றத் தேர்தலில் கட்சியை வழிநடத்த முடியும் என்றெல்லாம் நீங்கள் கருதினீர்களா என்ற கேள்வி  முன்வைக்கப்பட்டது.

 அதற்கு முதல்வரோ,  “அப்போது நிலவிய நெருக்கடி நிலைமை உங்களுக்குத் தெரியும். அந்த சூழ்நிலையில் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் என்னை தேர்ந்தெடுத்ததன் பேரில் தான் முதல்வராக பொறுப்பேற்றேன். அதற்கு முந்தைய ஆண்டுகளில் ஜெயலலிதா என் மீது நல்ல நம்பிக்கை வைத்திருப்பதை அனைத்து அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் அறிந்திருந்தனர் என்றதோடு,  கட்சி போராட்டங்களில் பங்கேற்றதற்காக ஏழு முறை சிறைக்குச்  சென்றேன். கட்சி விவகாரங்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் என்பதை கட்சியினர்  அறிந்திருந்தனர். கட்சி மீதும் தலைமை மீது விசுவாசமாக இருந்ததால் அனைவரின் நம்பிக்கைக்கு உரியவனாக இருந்ததால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்  என்று பதிலளித்தார். 

read more: கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மது அருந்தக் கூடாது: அமைச்சர் விஜயபாஸ்கர்

அத்துடன் என்னில் இருக்கும் ஜெயலலிதாவின் ஆத்மா எனக்கு வழிகாட்டும், அவரால் உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கம் அதன் காலத்தை நிறைவு செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஜெயலலிதா கூறியது போல், அதிமுக அரசு மக்களின் ஆதரவோடு, இன்னும் பல நூறு ஆண்டுள் கடந்தும் மக்கள் சேவை புரியும் எனக் கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

Exit mobile version