புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் உள்பட பல பொறுப்பாளர்கள் நேற்று நள்ளிரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளனர்.
புதுடெல்லி :
புதுச்சேரி நிலவி வரும் அரசியல் அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்காக தலைநகர் டெல்லிக்கு வருமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி பா.ஜ.கவினரை அழைத்துள்ளார். அதன்படி, நேற்று இரவு டெல்லி வந்தடைந்த பாஜக தலைவர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்கள்.
இந்த சந்திப்பின்போது பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் உடனிருந்துள்ளார். புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் ராஜினமா செய்ததால் நாராயணசாமி அரசின் பெரும்பான்மை குறைந்துள்ளது. மேலும், தற்போது 14 எம்.எல்.ஏ.க்கள் என்ற சமபலத்துடன் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியும் செயல்பட்டு வருகின்றனர்.
எனவே அடுத்த கட்டமாக புதுவை பா.ஜ.க.வின் நிலைப்பாடு புதுச்சேரியில் என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து அமித் ஷா மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் புதுவை பா.ஜ.க தலைவர்களிடம் எடுத்துரைத்தாகவும், காங்கிரசின் பலம் 14 ஆக குறைந்துள்ளதால் அரசு கவிழ அதிக வாய்ப்பிருக்கிறது என்றும் பேசப்பட்டதாக தெரிகிறது.
Read more – மூதாட்டியின் கூற்றை மாற்றி திரித்த நாராயணசாமி… பாவம்ப்பா இந்த பப்பு..
இந்தநிலையில், சட்டசபையை உடனடியாக கூட்டி ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமித்ஷா இவர்களிடம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.மேலும் ராஜினமா செய்த காங்கிரஸ் உறுப்பினர்கள் மல்லடி கிருஷ்ணாராவ், ஜான்குமார் உள்ளிட்டோர் பா.ஜ.க.வில் இணைவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது..
சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற சந்திப்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் புதுவையில் பா.ஜ.க ஆட்சி அமைய வேண்டும் என்று அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து பா.ஜ.க உறுப்பினர்கள் சிறப்பு விமானம் மூலம் இன்று அதிகாலை புதுச்சேரி திரும்பியுள்ளனர்.