சிவகங்கை உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றது எப்படி?

சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் குலுக்கல் முறையில் வெற்றிபெற்றார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 16 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளில் அதிமுக 8, திமுக கூட்டணி 8 இடங்களிலும் வெற்றிபெற்றது. ஜனவரி 11 மற்றும் 30, மார்ச் 4 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர், துணைத் தலைவர் தேர்தலை அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து புறக்கணித்ததால் ஒத்திவைக்கப்பட்டது. 

இதனையடுத்து, உடனே மறைமுகத் தேர்தலை நடத்த வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பிலிருந்து வழக்கு தொடரப்பட்டது. அதில்,  இரண்டு வாரத்திற்குள் தேர்தலை நடத்துவோம் என  மாநில தேர்தல் ஆணையம் உறுதியளித்தது. டிசம்பர் 4ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்வர் வருகை காரணமாக அது ரத்துசெய்யப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான மதுசூதனன் ரெட்டி முன்னிலையில் இன்று தேர்தல் நடத்தப்பட்டது. மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் பொன்மணி பாஸ்கரனும், திமுக சார்பில் செந்தில் குமாரும் போட்டியிட்டனர்.

மறைமுக வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், இரண்டு வேட்பாளர்களும் தலா 8 வாக்குகள் பெற்று சம பலத்தில் இருந்தனர். இதனையடுத்து, குலுக்கல் முறையில் தலைவரை தேர்ந்தெடுக்க தீர்மானிக்கப்பட்டு, வேட்பாளர்கள் இருவரது பெயரும் சீட்டில் எழுதப்பட்டு குலுக்கப்பட்டது. அதிமுக வேட்பாளர் பொன்மணி பாஸ்கரன் பெயர் அதில் இடம்பெற்றது. இதனால் பொன்மணி பாஸ்கரன் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி மதுசூதனன் அறிவித்தார். மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடை நடைபெறுகிறது. 

Exit mobile version