ஜெயலலிதா போல ஸ்டாலின் செயல்படுகிறார்: செல்லூர் ராஜூ புகழாரம்

ரவுடிகளை ஒடுக்குவதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போலவே முதலமைச்சர் மு. க ஸ்டாலின் செயல்படுகிறார் என்று முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பாராட்டு தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காவல் துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, ரவுடிகளை ஒடுக்குவதில் தனி கவனம் செலுத்துவார் என்று பலரும் பேசுவதுண்டு.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் ஸ்டார்மிங் ஆபரேஷன் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு 2500க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்தனர். இது தமிழக மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போலவே ஸ்டாலினும் ரவுடிகளை ஒடுக்குவதில் தனி கவனம் செலுத்துவதாக செல்லூர் ராஜூ பாராட்டு தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மதுரை தெற்கு தொகுதியில் நடைபெறும் அடிப்படை வசதிகள் சார்ந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனை சந்தித்து மனு அளித்தார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து தான் மதுரையில் ரவுடிகள் தொல்லை குறைந்தது. அதுபோன்றதொரு முயற்சியை தற்போது முதல்வர் எடுத்துள்ளார். இது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார்.

மேலும் அவர், கடந்த ஆட்சிக் காலங்களில் போடப்பட்ட டெண்டர்களை ரத்து செய்து விட்டார்கள். அந்தப் டெண்டர்களில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. எனவே அந்த பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தினார்.

Exit mobile version