சிலிண்டர் விலை உயர்வினை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளானது. ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வருகிறார்கள். ஆனால், இந்த கொரோனா நேரத்திலும் வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் மீண்டும் உயர்த்தப்பட்டு வருகிறது.
2020 மே மாதம் ரூ.599.50 என உயர்ந்த சிலிண்டர் விலை, ஜூன் மாதத்திலும் ஜூலை மாதத்திலும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், டிசம்பர் மாத தொடக்கத்தில் மீண்டும் 50 ரூபாய் விலையேற்றம் செய்யப்பட்டு, ரூ.660 என விற்பனை செய்யப்பட்டது. 15 நாட்களுக்குள்ளாக இரண்டாவது முறை மீண்டும் உயர்த்தி, கூடுதலாக ரூ.50 விலையில், ரூ.710-க்கு விநியோகம் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனை சுட்டிக்காட்டிய திமுக தலைவர் ஸ்டாலின், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பவர்களோ, அப்படியெல்லாம் எங்களை முழுதும் நம்பிவிடாதீர்கள்; நாங்கள் ஒருபோதும் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டமாட்டோம்; உங்கள் துன்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்வதுதான் எங்களின் ஒரே நோக்கம் என்பதுபோல செயல்பட்டு வருகிறார்கள் என்று சாடினார்.
read more: ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக மா.செ திமுகவில் இணைந்தார்!
குறிப்பாக, மத்தியில் ஆட்சியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, விவசாயிகள் தொடங்கி ஒவ்வொரு குடிமகன் மீதும் தாக்குதலைத் தொடுத்து வருகிறது என்றவர்,
“பொதுமக்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 15 நாள் இடைவெளியில் சிலிண்டர் விலை 100 ரூபாய் அதிகமாக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் குறிப்பாக, இல்லத்தரசிகளான பெண்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றனர். பழைய விலை இருந்த போது, சிலிண்டருக்குப் பதிவு செய்தவர்களுக்கும் புதிய விலைப்படியே சிலிண்டர் விநியோகம் என்பது அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது” என்றார்.
மேலும், “கொரோனா காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவிப்பதுடன் மட்டும் ஆட்சியாளர்களின் கடமை முடிந்துவிடுவதில்லை. பேரிடர் சூழலில் புதிய புதிய விலை உயர்வு நெருக்கடிகளை மக்கள் மீது திணிக்காமல் இருப்பதே ஆட்சியாளர்களுக்கு உள்ள கடமையும் பொறுப்புமாகும். எனவே, மத்திய அரசு உடனடியாக விலையேற்றம் செய்யப்பட்ட சிலிண்டர் விலையைத் திரும்பப் பெற்று, டிசம்பர் மாதத்திற்கு முந்தைய விலையிலேயே வீடுகளுக்கு விநியோகிக்க வேண்டும். இல்லாவிட்டால், தாய்மார்களின் கோபத்திலிருந்து ஆட்சியாளர்கள் தப்ப முடியாது” என்று வலியுறுத்தினார் ஸ்டாலின்.