ஞானதேசிகனுக்கு ஸ்டாலின், ஜெயக்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி…

சென்னையில் உயிரிழந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞான தேசிகனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பி.எஸ்.ஞான தேசிகன் நேற்று உயிரிழந்ததையடுத்து
அவரது உடல் சென்னை ஆழ்வார்பேட்டை, ஸ்ரீமன் சீனிவாசன் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமாகா தலைவர் ஜி.கே. வாசன் காலையிலேயே அவரது இல்லத்தில் தொண்டர்களுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்த வந்தபோது ஜி.கே.வாசன் அவரை அழைத்து சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் ஸ்டாலின் ஞான தேசிகனின் மனைவி மற்றும் உறவினர்களிடம் ஆறுதல் தெரிவித்தார். தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபாய் பாண்டியராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் போபண்ணா, அக்கட்சியின் மூத்த தலைவர்களான பீட்டர் அல்ஃபோன்ஸ், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வசீகரன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் உள்ளிட்டோரும் ஞான தேசிகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர் .

Exit mobile version