போஸ்டர், பேனர்களில் இனி நால்வர் படம்தான்: ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

பேனர் மற்றும் போஸ்டர்கள் இடம்பெற வேண்டிய புகைப்படங்கள் குறித்து முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக தயாராகி வருகிறது. திமுகவின் தேர்தல் அறிக்கை குழு ஒருபக்கம் மாவட்டந்தோறும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களின் கருத்துக்களை கேட்டு, அறிக்கையை வடிவமைத்து வருகிறது. அதே சமயம் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் திமுகவின் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.


இதனிடையே கடந்த 20ஆம் தேதி திமுக மாவட்ட, பேரூர், நகர, ஒன்றியச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதில் குறைந்தது 200 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என கட்சியினருக்கு இலக்கு நிர்ணயித்தார் ஸ்டாலின். இதனிடையே நாளை முதல் கிராம சவை மற்றும் வார்டு சபைக் கூட்டங்களை நடத்துகிறது திமுக.

இந்த நிலையில் ஸ்டாலின் திமுகவினருக்கு இன்று மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அடிமை ஆட்சியாளர்களிடமிருந்தும், அவர்களைப் பொம்மைகளாக்கி ஆட்டி வைத்து அதிகாரம் செலுத்துவோரிடமிருந்தும் இருந்தும் தமிழகத்தை மீட்கும் வகையில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று அதனை கலைஞரின் நினைவிடத்தில் காணிக்கையாக செலுத்த வேண்டும். அதற்கான செயல் திட்டமே இலக்கும் – நோக்கும் 200 என்பது என வலியுறுத்தினார்.

read more: திமுகவின் ஊழல் புகார்கள்: முதல்வர் சொல்வது என்ன?


கிராம சபை கூட்டங்களில் என்ன சொல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்திய அவர், விரிவான செயல்பாடுகளுக்காகவும், பணிச் சுமைகளைப் பகிர்ந்து கொள்வதற்காகவும், அண்மையில் சில மாவட்டக் கழக நிர்வாகங்கள் பிரிக்கப்பட்டன. தற்போது தமிழகத்தில் 77 கழக மாவட்டங்கள் உள்ளன. இவையே தேர்தல் களத்தை எதிர்கொள்வதற்கான மாவட்டங்களாகும். நிர்வாக வசதிக்காக மேலும் மாவட்டங்களைப் பிரிப்பது என்பது, தேர்தல் களத்தில் கழகம் மகத்தான வெற்றி பெற்ற பிறகு நடைபெறும் எனவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.


காலையிலேயே கிராமம், வார்டுகள் வாரியாக வீடு வீடாகச் செல்லுதல்; குறைந்தபட்சம் தினமும் ஐந்நூறு வீடுகளுக்குச் செல்ல வேண்டும். பத்தாண்டுகளாகத் தமிழகத்தைப் பாழ்படுத்திய அதிமுக ஆட்சி மீதான குற்றப் பத்திரிகைகள் ஆகியவற்றை எடுத்துச் சென்று ஒவ்வொரு வாக்காளருக்கும் வழங்கிட வேண்டும் என்ற ஸ்டாலின், பதாகைகள், சுவரொட்டிகள் என எதிலும் பெரியார், அண்ணா, கலைஞர், கழகத் தலைவர் தவிர வேறு யாருடைய படங்களும் இடம்பெறக் கூடாது என நிர்வாகிகளுக்கு முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஏற்கனவே முன்னணி தலைவர்கள் பலரின் புகைப்படங்களும் பேனர், போஸ்டர்களில் இடம்பெற்றிருக்கும். இந்த நிலையில் அவற்றை தவிர்க்க வேண்டுமென்கிற உத்தரவை பிறப்பித்துள்ளார் ஸ்டாலின்.

Exit mobile version