போலீசார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வீடு திரும்பிய கல்லூரி மாணவன் மணிகண்டன் உயிரிழந்தது குறித்து அறிக்ககை ஒன்றினை ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மாணவர்,கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.கடந்த 5 ஆம் தேதியன்று பரமக்குடி – கீழத்தூவல் சாலையில் கீழத்தூவல் காவல் நிலைய போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது,அவ்வழியாக பைக்கில் தன் நண்பருடன் வந்த மணிகண்டனை, சோதனை செய்வதற்காக போலீஸார் கையசைத்து நிறுத்தச் சொல்லியிருக்கின்றனர்.
ஆனால்,மணிகண்டன் தனது பைக்கை நிறுத்தாமல் வேகமாகச் சென்றதாகவும்,பின்னர் போலீஸார் மணிகண்டனைப் பின்தொடர்ந்து சென்று பிடித்து விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து,மணிகண்டனின் பைக், செல்போன் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும்,நடந்த சம்பவம் குறித்து மணிகண்டனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.காவல் நிலையத்துக்கு வந்த மாணவரின் பெற்றோர் மணிகண்டனை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால்,இரவு வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் மணிகண்டன் 3 முறை ரத்த வாந்தி எடுத்ததாக சொல்லப்படுகிறது.மேலும்,அவரது ஆண் உறுப்பில் வீக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து,அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட மணிகண்டனை மருத்துவர் பரிசோதனை செய்து விட்டு அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாணவனின் பெற்றோர் போலீசார் தாக்கியதில் தான் உயிரிழந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். மாணவனின் உடலை வாங்க மறுத்தும் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘
தி.மு.க. அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வது மிகுந்த கவலை மட்டுமல்லாமல், மக்களிடையே ஒருவித அளிப்பதாக உள்ளதோடு அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், இராமநாதபுரத்தில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் திரு. மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலையத்திற்குட்பட்ட காவல் துறையினர் 04-12-2021 அன்று வாகன சோதனையில் ஈடுபட்டதாகவும், அப்போது அவ்வழியே நீர்க்கோழினேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் சஞ்சய் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்ததாகவும், அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியபோது, அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாகவும், இதனால் ஆத்திரமடைந்த காவல் துறையினர் அவர்களை பின் தொடர்ந்து சென்று விரட்டிப் பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், மாலையில் மணிகண்டனின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட காவல் துறையினர் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கோரியதாகவும், பின்னர் வீட்டிற்குச் சென்ற மணிகண்டன் இரவில் தூங்கிய நிலையில் காலையில் மர்மமான முறையில் இறந்ததாகவும் செய்திகள் வந்துள்ளன.
இது குறித்து மணிகண்டனின் உறவினர்கள் தெரிவிக்கையில், காவல் நிலையத்திலிருந்து வரும்போதே மணிகண்டனால் நடக்கக்கூட முடியவில்லை என்றும், வீட்டிற்கு வந்த பிறகு மூன்று முறை வாந்தி எடுத்தார் என்றும், மணிகண்டனின் பிறப்புறுப்பில் வீக்கம் ஏற்பட்டிருப்பதாகவும், இதற்குக் காரணம் காவல் துறையினர்தான் என்றும், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும், இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். இதனை மறுக்கும் காவல் துறையினர் பாம்பு கடித்து மணிகண்டன் இறந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மணிகண்டனின் உறவினர்கள் பரமக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்ட நிலையில், உயர் அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை செய்யப்படும் என உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன.
காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மணிகண்டன் நல்ல நிலையில் தான் இருந்தார் என்றால், காவல் துறையினரால் துன்புறுத்தப்படவில்லை என்றால், அவருடைய பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்துச் செல்லுமாறு கூறியது ஏன்? உறவினர்கள் கூறுவது போல், மணிகண்டன் நடந்துகூட செல்ல முடியாத அளவுக்கு காவல் நிலையத்தில் என்ன நடந்தது? மணிகண்டனின் நண்பரை அழைத்து காவல் துறை விசாரணை நடத்தியதா? இறப்பிற்கு காரணம் என்ன? போன்ற சந்தேகங்கள் அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. திரு. மணிகண்டன் மரணம் குறித்து தீர விசாரணை நடத்தப்பட்டு, உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசாங்கத்திற்கு உண்டு.
இதேபோன்று, விழுப்புரம் மாவட்டம், சு. பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த உலகநாதன் என்கிற விவசாயி அவரது மனைவியுடன் சேர்ந்து நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சுண்டல், போண்டா ஆகியவற்றை விற்பனை செய்தபோது, அரகண்டநல்லூர் காவல் துறையினர் அதைத் தடுத்ததாகவும், இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வில் உலகநாதன் கீழே விழுந்து உயிரிழந்தார் என்றும், இதுகுறித்து நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.
இந்த இரு நிகழ்வுகளுக்கும் காவல் துறையினரின் மெத்தனப் போக்கே காரணம் என்பது செய்திகளைப் படிக்கும்போதே கண்கூடாகத் தெரிகிறது. காவல் துறையினர் திறமையாக கையாண்டு இருந்தால் இந்த இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்காது.
காவல் துறையினரின் மெத்தனப் போக்கிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, திரு. மணிகண்டன் மற்றும் திரு. உலகநாதன் ஆகியோரின் இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்படவும், இதுபோன்ற உயிரிழப்புகள் இனி வருங்காலங்களில் ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ளவும், உயிரிழந்தோரின் குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கு அரசு உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கவும் ஆவன செய்ய வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.’ என குறிப்பிட்டுள்ளார்.